Saturday, July 2, 2011

அமெரிக்கா வந்து எவ்ளோ நாள் ஆச்சு?

நண்பர் இளா கொசுத்தொல்லைன்னு ஒரு இடுகை போட்டிருந்தார். அதில் NRI மக்களை இந்தியா பார்க்கும் விதத்தில் இருக்கும் மாற்றங்களை சொல்லியிருந்தார். அதே மாதிரி அமெரிக்க வாழ் NRI மக்கள் எப்படி மாறிப் போகிறார்கள் என்று ஓர் இடுகை.

மொச பிடிக்கிற நாயை மூஞ்சை பார்த்தா தெரியும்னு சொல்றது மாதிரி NRI மக்களின் செய்கைகளை வச்சு அவங்க அமெரிக்கா வந்து எவ்ளோ நாள் ஆச்சுன்னு
சொல்லிடலாம்.

ஆங்கிலம் : அமெரிக்கா வந்து இறங்கியதும் முதல் ஷாக் இவங்களோட உச்சரிப்பு. இங்கிலிபீசில நான் சேக்ஸ்பியர் லெவல்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தவனுக்கு அமெரிக்கர்களின் ஆங்கில உச்சரிப்பு கிர்ர்ரட்டிக்கும் அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சிக்கிட்டு அத்தோட நிக்காமல் அமெரிக்கா நுனி நாக்கு ஆங்கிலம் பேச முயன்று கேவலமா தோத்துப் போவாங்க. (அமேரிக்க அக்சென்ட் வெகு சிலருக்கே வரும், இங்கே பிறந்த / வளரும் குழந்தைகள் அட்டகாசமா பேசும்).

சரி நமக்கு உச்சரிப்புதான் வாய்க்கலை, அவர்கள் உபயோகிக்கும் பதங்களை உபயோகிக்க ஆரம்பிப்பது அடுத்த லெவல்.

யாராவது How Are you ன்னு கேட்டா I am fineன்னு சொல்லியே பழக்கப்பட்ட நாம I am Good என்று சொல்ல ஆரம்பிப்போம். ஏதாவது ஒரு விசயத்துக்கு தயாரான்னு கேட்டா I am Ready என்று சொல்லாமல் I am all set என்றே சொல்லுவோம்.

நண்பர்களை டேய் என்று அழைக்காமல் DUDE என்று அழைக்கத் தொடங்கும்போதும் இந்தியாவில் இருப்பவரிடம் தொலை பேசும்போது Sounds Good என்று சொல்லி மறு முனையில் இருப்பவர் நம்ம குரல் அவ்ளோ நல்லாவா இருக்குன்னு குழம்பி அவரை சுத்தலில் விடும்போது பார்ட்டி அமெரிக்கா வந்து சில பல வருஷங்கள் ஆச்சுன்னு தெரிஞ்சிக்கலாம்.

சாப்பாடு : அரிசியும் கோதுமையுமே மனுஷன் சாப்பிட உகந்தவை. சாலட் என்பது இலையும் தழையும், அது ஆடு மாடு சாப்பிடும் வஸ்து, மேலும் வெஜிடபிள் சாலட் என்பது முழு சாப்பாட்டுக்கு முன் சாப்பிடுவது, பர்கர் என்பது
இரண்டு முழு சாப்பாடுகளுக்கு இடையில் பொழுது போக சாப்பிடுவது - இதெல்லாம் ஊருக்கு வந்த புதுசில் அடிக்கும் கமெண்டுகள்.

தினமும் ஆபிஸுக்கு வீட்டு சாப்பாடு எடுத்துப் போக முடியல, பக்கத்தில இந்தியன் ரெஸ்டாரண்ட் எதுவும் கிடையாது- சூப், சாண்ட்விச், பர்கர், சாலட் இதுல ஏதாவது சாப்பிட்டு அட்ஜஸ்ட் பண்றேன் - இது வந்து ஓரிரு வருஷங்கள் ஆன நிலை.

விடுமுறை நாட்களிலும், நண்பர்கள் வீட்டுக்குப் போனாலும் - I eat only Salad and Soup for Lunch and Dinner, Rice and Wheat are full of Carbs you know!!!இப்போ ஐயா அமெரிக்கன் ஆகிட்டாருன்னு அர்த்தம்.


பண விஷயம்:

சில்லரைக் காசு அமெரிக்கா வந்த புதுசில் குழம்ப வைக்கும் இன்னொரு விசயம் - நாணயங்கள்.

ஊருக்குப் புதுசு : ஐந்து செண்டுக்கும் பத்து செண்டுக்கும் வித்தியாசம் தெரியாத நிலை, அதிலும் முக்கியமா ஐந்து செண்ட் பத்தை விட பெரிசா இருப்பது இன்னும் குழப்பும்.

ஓரிரு வருஷங்கள் ஆன பின்: அமெரிக்க நாணயங்களின் ஷேப்பும் மதிப்பும் நல்லாவே பழக்கமாகியிருக்கும், அத்துடன் பென்னியும் நிக்கலும் டைமும் நாலணா எட்டணா போல பழகியிருக்கும்.

அமெரிக்காவில் செட்டில் ஆயாச்சு : தெருமுனைக் கடைகளில் தரும் மீதப் பணத்தில் ஒரு செண்ட்களை எடுக்காமல் விட்டு விட்டு வர ஆரம்பிக்கும் போது அமெரிக்காவில் செட்டில் ஆயாச்சுன்னு தெரிஞ்சிக்கலாம்.

$ to ரூபாய் :

ஊருக்குப் புதுசு : எல்லாப் பொருட்களின் விலையையும் ரூபாயில் கன்வெர்ஷன் செய்து கவலைப் படுவது அமெரிக்கா வந்ததும் வரும் ஹாபி. ஒரு ப்ளேட் இட்லி 250 ரூபாயா? ஒரு தோசயின் விலை 500 ரூபாயா என்று சரியா சாப்பிடதா பலருண்டு இங்க.

ஒரிரு வருஷங்கள் ஆச்சு : கன்வெர்ஷன் மோகம் போயாச்சு. Your home is where you live என்பதை நம்பத்தொடங்கி பொருட்களை சகஜமாக வாங்கத் தொடங்கியிருப்போம்.

செட்டில்ட் இன் அமெரிக்கா : இவங்களை இந்திய விசிட்டின் போது தெரிஞ்சிக்கலாம் - அங்கு துணிமணி வாங்கும் போதோ, கலைப் பொருள் வாங்கும் போதோ - ஆயிரம் ருபாய் அப்படினா கிட்டத்தட்ட இருபது டாலர் அப்படின்னு சொன்னா பார்ட்டி அமெரிக்க செட்டில்ட்னு தெரிஞ்சிக்கணும்.


வீடு தேடும் படலம்:

அமெரிக்கா வந்திறங்கியது தேடும் அப்பார்ட்மெண்டில் நாம் எதிர்பார்க்கும் விசயங்கள் : வாடகை கம்மியாகவும் இந்தியர்கள் நிறையவும் இருக்கும் குடியிருப்பு, ட்ரெயினுக்குப் பக்கத்தில் இருக்கணும் (அப்பத்தான் கார் இல்லாம காலத்தை ஓட்ட முடியும்), இந்தியக் கடை மற்றும் வால்மார்ட் அருகில் இருப்பது அவசியம்.

வாடகை அதிகமானாலும் பரவாயில்லை- நல்ல தரமான அப்பார்ட்மெண்ட் வேணும், காரில் ஆபிஸ் போய் வர வசதியா இருக்கணும், தேசிக்கள் அதிகமா இல்லாம இருக்கணும் (ஒரே பாலிடிக்ஸ் யூ நோ!!)- இப்படியெல்லாம் டிமாண்ட் வச்சா அமெரிக்கா வந்து ஓரிரு வருஷங்கள் ஆச்சுன்னு அர்த்தம்.

ரியல் எஸ்டேட் ப்ரோக்கரிடம் மூணு நாலு லட்ச டாலர் விலைக்கு நல்ல வீடு பார்க்கச் சொல்லி - நல்ல டவுனா இருக்கணும், Excellent School District, க்ரைம் ரேட் கம்மியா இருக்கணும், Unemployment, diversity அப்படின்னு பெரிய Requirement லிஸ்ட் கொடுத்தால் அமெரிக்காவில் மொத்தமா செட்டில் ஆயாச்சுன்னு அர்த்தம்.

விசா: வாழ்க்கை ஒரு வட்டம் என்பதற்கு இந்தியர்களும் அமெரிக்கக் குடியுரிமையும் சிறந்த உதாரணம்.

இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையான பொட்டி தட்டும் மக்களின் கனவு H1B Visa. அமெரிக்கா வந்திறங்கியதும், ஷார்ட் டெர்ம் விசிட்டை லாங் டெர்ம் ஆக்குவதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப் படும்

விசாவும் நீண்ட நாள் தங்கும் ஆசையும் நிறைவேறியதும் அடுத்த இலக்கு பச்சை அட்டை (Green Card) மிக நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட வரிசையில் இணைந்து இதற்காக பலவருடங்கள் காத்திருப்பது இடைப்பட்ட நிலை.

பச்சை அட்டை கிடைத்து ஐந்தாண்டுகளில் அமெரிக்கக் குடியுரிமை அடுத்த இலக்கு. அமெரிக்கா வந்து பத்தி பதினைந்து ஆண்டுகள் விசாவையும், பச்சை அட்டையையும், குடியுரிமையும் துரத்தி கடேசில எல்லாம் கிடைச்சப்புறம், செட்டிலானபின், I am going back to India for Good என்பது உச்சகட்டக் கொடுமை.

நான் இப்போது பெரும்பான்மையான விசயங்களில் ரெண்டாவது கேட்டகரியில் இருக்கிறேன்.


இவை தவிர நீங்க நினைக்கும் மத்த விசயங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்

Thursday, March 17, 2011

என் வாழ்வில் இன்னுமொரு பெண்

காத்து காத்து கண்கள் பூத்திருந்தேன் நீ வருவாயென !! பூத்து பூத்து புன்னகை சேர்த்து வைத்தேன் நீ வருவாயென!!
வந்தாயடி என் வாழ்வின் வசந்தமாக.. வாழ்வாயடி நீ வளமனைத்தும் பெற்றவளாக..
மூன்றாவது முக்கியப் பெண்ணடி நீ என் வாழ்வில்.. மூன்றுமே முத்துக்களடி என்னளவில்..
பத்து மாதம் தாய் பொருத்தாள் உன் பாரம், இனி நீதானடி என் வாழ்வின் ஆதாரம்..
இத்தனை நாள் பொறுமை காத்தோமடி உன்னைக் காண.. இனி நீண்ட நாள் வேண்டாமடி உன் பெருமைகள் காண.
என் மாதிரி உன் மாதிரி நீ ஆக ஆசையில்லை கண்ணே- நீ ஆக வேண்டியது உலகுக்கே முன் மாதிரி..
ஆசையோடு உனக்கிட்ட பேர் ஸ்ரீஹிதா, சந்தோஷங்களை இனி நீ அள்ளித்தா..


சோழர் பரம்பரையில் மற்றுமொரு MLA. முதல் குழந்தையாக பெண்ணைப் பெற்ற நீண்ட பதிவர்கள் வரிசையில் இன்று நான். நானும் என் மனைவியும் எங்க முதல் குழந்தையை எதிர் பார்த்திருந்தது உங்களில் சிலருக்குத் தெரியும். இன்று உதயமானது எங்கள் சொர்க்கம்.
பெண் குழந்தைக்கு ஸ்ரீஹிதா ஸ்ரீராம் என்று பெயரிட்டிருக்கிறோம். ஸ்ரீஹிதாவின் முதல் புகைப் படம் உங்கள் பார்வைக்கு..



ஹிதா வரும் காலத்தில் என்னவாக வேண்டுமானாலும் ஆகட்டும். நல்ல உள்ளங்களின் வாழ்த்துக்களோடு நேர்மையான,நல்ல மனுஷியாக அவளை வளர்ப்போம்.

Saturday, December 11, 2010

நன்றி நண்பர்களே:

கடந்த ஏழு நாட்களாக என்னை தமிழ்மண முகப்பில் பொறுத்துக்கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றி. வாய்ப்பளித்த தமிழ் மண நிர்வாகிகளுக்கும் முக்கியமாக சங்கர பாண்டி ஐயாவுக்கும் மிக்க நன்றி.

டிசம்பர் 12 - தமிழ் நாட்டின் இரண்டாம் தீபாவளி - ரஜினியின் பிறந்த நாள். கமல் ரசிகனான எனக்கு இத்தினம் வேறு வகையில் முக்கியமானது. இன்று எங்களுடைய பதினோறாவது
ஆண்டு மணநாள்.

ஒரே ஒரு வாரம் என் மூஞ்சியை பொறுத்துக் கொள்ளுவது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பதை உங்கள் மூலமாக உணர்ந்தபின், பதினைந்து வருடமாய் பின் தூங்கி முன் எழுந்து சகித்துக் கொண்டிருக்கும் என் சகதர்மினிக்கு இந்த பதிவில் நன்றி சொல்வது என் தலயாய கடமையாய் உணர்கிறேன். ஒரு வார கஷ்டத்தை அனுபவித்த நீங்களும் ஆட்சேபனை ஏதும் சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன். (நஞ்சப்பா...கடேசி பெஞ்சுல ஒராள் ஆட்சேபணையா புருவத்த சுருக்கறான் பாரு..அமுக்கிப் போடேய்)

சகதர்மினி, அவர், இவர், நன்றி என்றெல்லாம் கூவுவது எனக்கே ரொம்ப அன்னியப்பட்டாலும், மைக் பிடித்தால் கடமை தவறா மோகன் பரம்பரை என்ற வகையில்...பாஸ்டன் கவுண்டிங் ஸ்டார்ட்ஸ்... (அவர் இவர்ன்னு கூப்பிட்டா அடுத்த வூட்டு அம்மணியைக் கூப்பிடுற மாதிரி இருக்கு என்பதால் அவள் இவள்ன்னே செல்லமாய் கூப்பிடுக்கிறேன். பெண்ணியவாதிகள் ஓரமா குந்திகினு ஜோடா குடிங்கப்பா ப்ளீஸ்)

முதல் நன்றி பதினஞ்சு வருசத்துக்கு முன்ன சொன்ன காதலை ஏத்துக்கிட்டு, சரித்திரத்தில் நானும் ரவுடி என்று பதிவு செய்ய உதவியதற்காக.

அடுத்த நன்றி அடுத்த நாலு வருசத்தில் போட்ட சண்டைகளில் விட்டுக் குடுத்த மாதிரி நடித்து நான் பெரிய தாதா என்று அதே சரித்திரத்தை திருத்தி எழுதியதற்காக.

அப்பாலிக்கா கல்யாணத்துக்கும், அதுக்கும் மேல பதினோரு வருசமா என்னைப் பொறுத்துக் கொண்டதுக்கும், சென்னையை விட்டு வெளியே போக மாட்டேன் என கிணற்றுத் தவளையாக
இருந்த என்னை தில்லி ஆஃபரை எடுத்துக்கச் சொன்னதுக்கும்,என்னை அமெரிக்கா அழைத்து வந்ததுக்கும் அப்படின்னு ஒவ்வொண்ணுக்கா அவளுக்கு நன்றி சொல்லணும்னா, இன்னும்
ஒரு மூனு வாரம் நான் மட்டுமே தமிழ்மண ஸ்டாராக ஓட்டவேண்டியிருக்கும். (சங்கர பாண்டி ஐய்யா அப்பிடியே ஓடிப் போயிடுன்னு சொல்லிட்டார் அவ்வ்வ்வ்)

நான் இதுவரை எடுத்த முடிவுகளிலேயே மிகச்சிறந்த முடிவுகள் இரண்டு, ஒன்று என் இன்றைய மனைவியை 15 வருஷத்துக்கு முன்னர் காதலியாக்கிக் கொண்டது மற்றது 2002 இல் புதுதில்லிக்கு சென்றது. 'comfort zone'-ஐ விட்டு வெளியே வந்தால் தான் உலகம் எவ்வளவு பெரிசுன்னு தெரியும். "A ship is safe in harbor, but that's not what ships are for"ன்னு சும்மாவா சோக்கா சொன்னாங்க? நானும் என்னுடைய 'comfort zone'-ஐ விட்டு வந்தப்புறம்தான் என்னுள் பலப்பல மாற்றங்கள். நான் அன்று தயங்கிய போது என் மனைவி மட்டும் "போய்த்தான் பாக்கலாமே"ன்னு சொல்லாமல் இருந்திருந்தா இன்று நாங்கள் பல விசயங்களை அடைந்திருக்கவே முடியாது.

புதுதில்லியில் இருக்கும் போது ஒரு நாள் நான் திடீரென்று "வேலையை விட்டு விட்டு பிசினஸ் செய்யப்போறே"ன்னு சொன்ன போது அவள் மறுப்பேதும் சொல்லவில்லை. சில
மாதங்களுக்குப் பிறகு "Business is not my cup of tea, I am getting back to work"ன்னு சொன்னபோதும் ஒன்றும் சொல்லலை. வேறொருவராய் இருந்தால் "நான் அன்னிக்கே சொன்னேனே கேட்டானா பாவி மனுஷன் "- பாட்டு ஆரம்பமாகியிருக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள சில ஏழைக்குழந்தைகளின் படிப்புக்கு பண உதவி செய்யவேண்டும் என்பது என் கனவு. அது பற்றி சொன்ன போது "எவ்வளவு பணம் குடுக்கப் போற?...எப்படி..?"
என்றெல்லாம் மருந்துக்கு கூட கேட்கவில்லை. இப்போதும் நான் என் குடும்பத்தாருக்கு பணமோ / கிப்ஃடோ குடுக்கும் போது "இவ்வளவுதான் குடுக்கப் போறியா, அவங்களுக்கு இது
போதுமான்னு கேட்டியா - வேணும்னா இன்னும் கொஞ்சம் கொடுக்கலாமே" என்பதைத் தவிர வேறு தர்க்கம் ஏதுவும் அவர் செய்து கேட்டறியேன். எத்தனை பேர் மாமியாருக்கும்
நாத்தனாருக்கும் கணவன் பணம் கொடுக்கும் போது இப்படி சொல்வார்கள் என்று நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். நண்பர்களுக்கு பல தடவை பண உதவி செய்து சில சமயம் நஷ்டப்
பட்ட போதும் கூட இன்றளவில் நான் செய்யும் உதவிகளை அவர் ஆட்சேபித்து ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை.

இதற்கெல்லாம் மேல் அவருக்கு அமெரிக்காவிற்கு ட்ரான்ஸ்பர் ஆகிய போது, நானும் எல்2 விசாவில் அவர் கூடவே வந்து இங்கு வேலை தேடிக்கொள்ளலாம் என்று முடிவு செய்தோம்.
வந்த அடுத்த மாதமே எனக்கு வேலை கிட்டியதென்றாலும், அந்த முப்பது நாளும் நான் சம்பாதிக்கவில்லையே என்று கவலைப் பட்டுவிடக்கூடாதே என்று அவர் கையில் இருந்த பணம் எல்லாவற்றையும் என் கையில் குடுத்து, வங்கிக் கணக்கின் ஆன்லைன் ஆப்ரேஷனையும் என்வசம் ஒப்படைத்து, அவர் செலவுக்குக் கூட என்னிடம் பணம் வாங்கிச்சென்ற அவரின் அன்பையும், பாசத்தையும் நினைத்து நெகிழ்ச்சியோடு ஒரு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

என்னுலகத்தில் அவள் ஒரு முக்கிய அங்கம், அவளுக்கு உலகமே நான் தான். இப்பேற்பட்ட பெருமையை அளித்த அவளுக்கு இந்நன்னாளில் என் வாழ்த்துகளும் நன்றியும்.

இந்த நட்சத்திர வாரம் என் மணநாளில் முடியுமாறு வாய்ப்பை வழங்கிய தமிழ் மண நிர்வாகிகளுக்கும், ஊக்கமளித்த உங்களுக்கும் நன்றி..

அடுத்து வரும் தமிழ்மண நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்களைச் சொல்லி உங்களிடமிருந்து "என்றும் அன்புடன்" விடை பெறுகிறேன் நண்பர்களே...

மழை - சிறுகதை

நாலு நாளா பெஞ்ச மழையில சென்னை ஒரே வெள்ளக் காடா இருந்தது. எல்லா பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்தது.

"அதெல்லாம் இல்ல மல்லிகா! நம்ம ரோட்டில அவ்வளவா தண்ணி நிக்கல.. வீட்ல எல்லாம் போட்டது போட்ட படி கிடக்கு. இன்னிக்கு லீவ் போடாம வந்துட்டு போயிடு!"

".."

"என்ன சின்னக் குழந்தையா? பெரியவன் சரவணனுக்கு லீவ் தானே! அவன ரெண்டு மணிநேரம் பாத்துக்கச் சொல்லிட்டு வந்துரு மல்லிகா. அத்தனை பாத்திரம் கிடக்கு! துணி தோய்க்கணும், வெள்ளிக்கிழமை வீட்டையும் கண்டிப்பா தொடைக்கணும். என்னை கூட லீவு போடாம ஆபிஸ் வரச் சொல்லிட்டாங்க. சீக்கிரமா வந்துரு மல்லிகா.. "

".."

"இதுக்குத்தான் செல்போன் வச்சிருக்குற வேலைக்காரியெல்லாம் வேணாம்னு சொன்னேன், நீங்கதான் ஹாஸ்பிட்டல்ல வேலை செய்யுற ப்யூனின் சம்சாரம்னு சொல்லி வேலைக்கு வச்சீங்க!!" என்று புலம்பிய படியே செல்போனை கீழே வைத்தாள் அனுசுயா. டாக்டர் கேசவன் பிறந்ததே ஹிந்து பேப்பர் படிக்கத்தான் என்பது போல அதில் மூழ்கி இருந்தார்.

"ஏதாவது காதில வாங்கினாத்தானே" என்றவாறே புலம்பலைத் தொடர்ந்தாள்.. " குடிசை ஒழுகுது, குழந்தைக்கு உடம்பு சரியில்ல,பெரிய பையனுக்கு லீவுன்னு மட்டம் போடறதுக்கு எக்கச்சக்க சாக்கு!! கண்டிப்பா சொல்லிட்டேன் வேலைக்கு வந்தே ஆகணும்னு!" என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு கிச்சனுக்குள் நுழைந்தாள். கம்புயூட்டர் கேம்ஸில் ஆழ்ந்திருந்த வைகுந்த் ஆச்சர்யமாய் அம்மாவைப் பார்த்துக் கேட்டான்.

"இப்போ தானேம்மா ஆபிஸுக்கு போன் பண்ணி லீவ் சொன்னே அதுக்குள்ள மல்லிகா ஆண்டிகிட்ட வேலைக்குப் போகணும்னு சொல்றியே என்ன ஆச்சுமா?"

"அதெல்லாம் உனக்குப் புரியாது வைகுந்த்! வேலைக்காரிக்கெல்லாம் ரொம்ப இடம் கொடுக்கக் கூடாது, இரு உனக்கு காம்ப்ளான் கொண்டு வர்றேன், குடிச்சிட்டு கம்புயூட்டர் கேம்ஸ் விளையாடு" என்று சொல்லிக்கொண்டே ஹாலுக்கு வந்தாள். அங்க பாத்தா வைகுந்த் கேமை மூடி வச்சிட்டு ரெயின் கோட்டை மாட்டிக் கொண்டு இருந்தான்.

"எங்கடா கிளம்புற? வெளியில தண்ணி வெள்ளமா ஓடுது! அதுல போனா ஜுரம் வந்திடும் ஒழுங்கா வீட்டுக்குள்ளேயே விளையாடு."

"இதே மழையும் தண்ணியும் மல்லிகா ஆண்டிக்கும் அவங்க பசங்களுக்கும் உண்டு தானேம்மா? நீ வேற சின்ன பாப்பாவையும் சரவணனையும் வீட்ல தனியா விட்டுட்டு ஆண்டியை வேலைக்கு வரச் சொல்லிட்ட! சரவணனுக்கும் என் வயசு தானேம்மா ஆகுது? அவன் மட்டும் எப்படிம்மா தனியா சின்ன பாப்பாவைப் பாத்துப்பான், நான் போயி ஆண்டிய இங்க அனுப்பறேன். அவங்க வேலை செஞ்சு முடிச்சு வர்ற வரைக்கும் நானும் சரவணனும் சின்ன பாப்பாவோட விளையாடிக்கிட்டு இருக்கோம், போற வழியில் பாப்பாவுக்கு ஒரு சிரப் பாட்டிலும் வாங்கிட்டு போறேன். நீதானம்மா பொய் சொன்னா உம்மாச்சி கண்ணைக் குத்திடும்னு சொல்லித் தந்திருக்க. இப்ப நீயே பொய் சொல்லியிருக்க, நான் போயி சரவணனுக்கு ஹெல்ப் பண்ணா சாமி உன் கண்ணை குத்தாதில்ல..?"

ஒரு கணத்தில் பத்தே வயதான வைகுந்த் அனுசுயாவுக்கு ஞானியாகத் தெரிந்தான். அடுத்த நிமிடம் போனில் பேசிக் கொண்டிருந்தாள் அனுசுயா.

"ஆமாம் மல்லிகா நாந்தான் பேசறேன், இல்ல இல்ல ஆபிஸுக்கு மறுபடியும் போன் பண்ணி லீவ் சொல்லிட்டேன், நீ ஏதாவது
வண்டி பிடிச்சு சரவணனையும், சின்ன பாப்பாவையும் கூட்டிக்கிட்டு இங்க வந்திடு, ஐயா டாக்டர்தானே பாப்பாவை அவரிடம் இங்கேயே காட்டி மருந்து கொடுத்திடலாம்! நீ வேலையெல்லாம் முடிக்கறதுக்குள்ள நான் சமையலை முடிச்சிடறேன். நீங்க இங்கேயே சாப்பிட்டுக்கலாம், நீ பாவம் ஒழுகுற குடிசையில என்ன சமைக்க முடியும்? வைகுந்தும்,சரவணனும் சாயங்காலம்
வரைக்கும் விளையாடிக்கிட்டு இருக்கட்டும், அப்புறமா நிங்க வீட்டுக்குப் போய்க்கலாம்.."

மறுமுனையில் மாற்றத்துக்கு காரணம் புரியாமல் முழித்துக்கொண்டு இருந்தாள் மல்லிகா.


டிஸ்கி : மொதோ முறையா கதை மாதிரி ஒண்ணு எழுத முயன்றிருக்கிறேன்.கேவலமா இருக்கா ரொம்பக் கேவலமா இருக்கான்னு சொன்னீங்கன்னா அடுத்த முறை ரிஸ்க் எடுக்க மாட்டேன்.

Friday, December 10, 2010

கம்பெனியை காதலிக்கணுமா? ஒரு விவாதம்

பின்னூட்டப் புயல் ராம்ஜி யாஹூ அமெரிக்கவில் பிடிக்காத பத்து இடுகையில் ஒரு கருத்தைச் சொன்னார். இதோ அந்தப் பின்னூட்டம்

//எவ்வளவுதான் சம்பளம், சலுகைகள் கொடுத்தாலும் ஊழியர்களுக்கு தங்கள் நிறுவனம் மீது ஒரு பந்தம், பாசம் இருக்காது.நம் ஊரில் மாதம் 5000 சம்பளம் வாங்கும் ஊழியர் கூட முதலில் தன நிறுவன நலனை பார்ப்பார் பின்பே தன சுய நலம் கருதுவார். ஆனால் அமெரிக்காவில் நேர் எதிர் போக்கு//

இதுக்கு அப்பதிவிலேயே பதில் சொல்ல ஆரம்பிச்சேன். அப்புறம் இதுபத்தி கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்பதாலும் இது குறித்தான பிறரின் கருத்துகக்ளையும்
அறிய வேண்டும் என்பதாலும் ஒரு தனி இடுகையா எழுதறேன். பல நேரங்களில் இது பத்தி விவாதிக்க வேணும்னு நினைப்பேன்.இப்பத்தான் நேரம் கூடி வந்திருக்கு.

வேலை செய்யும் நிறுவனத்தின் மீது பந்தம் பாசம் எல்லாம் தேவையா? இது நீயா நானாவில் விவாதிக்க நல்ல தலைப்பு. சின்ன லெவலில் என் தளத்தில் விவாதிக்கலாம்.

நான் பார்த்த வரையில் வேலை செய்யும் நிறுவனத்தின் மீது அளவு கடந்த பாசம் வைத்து அதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். கம்பெனிக்காக என் உயிரையே கொடுப்பேன் என்றெல்லாம் சொல்வார்கள். பலவருஷம் வேலை செய்வதையும் பிணைப்பையும் இணைத்துப் பேசுவார்கள். என்னைப் பொருத்த மட்டில் இதெல்லாம் தேவையில்லை.

என்னோட கருத்துக்களை முன் வைக்கிறேன், உங்க கருத்துக்களை எதிர் பார்க்கிறேன். முக்கியமா, இனியவன் உலக்ஸ் அவர்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன். நான் அறிந்த அளவில் அவர் வேலை செய்யும் கம்பெனியோடு ரொம்ப அட்டாச்டு. வேற ரொம்ப நல்ல Opportunity வந்த போதும் நிறுவனத்தை விட்டு விலகாதவர், திடீரென்று போன் பண்ணி மலேசியாவிலிருந்து இந்தியா வாங்கன்னு டீ குடிக்க கூப்பிடறா மாதிரி கூப்பிட்டாலும் வீட்டுக்கே போகாமல் நேரா சென்னை வரும் அளவுக்கு கம்பெனியை காதலிப்பவர். அவர் கருத்தை அறிய ஆவல்.

My Views about Job and its importance in your life:



வேலை செய்யும் கம்பெனிக்கு உண்மையா, நேர்மையா இருக்கணும் அதுக்காக கம்பெனியை காதலிப்பதோ அல்லது குடும்பத்துக்கு முன்னர் வேலையை வைப்பது சரியல்ல. நெறய இந்தியர்கள் குடும்பத்தைக் கவனிக்க நேரமில்லாமல் வேலையோடு ஒன்றியிருப்பதைக் காண்கிறேன். ஒரு மேனேஜர் என்ற வகையிலும் நான் எதிர்பார்த்தது எதிர்பார்ப்பது திறமையான, நேர்மையான,கம்பெனியின் பணத்தைக் களவாடாத, கம்பெனிக்கு வர வேண்டிய லாபத்தை தனதாக்கிக் கொள்ளாத Employee தானே தவிர கம்பெனியைக் காதலிப்பவரை அல்ல. என் டீமில் வேலை செய்த நண்பர்களுக்கு வேறு நல்ல வாய்ப்புகள் கிடைத்த போது சந்தோஷமாக அனுப்பி வைத்தேன். அவங்க இன்னிக்கும் சென்னையிலிருந்தும் மும்பையிலிருந்தும் துபாயிலிருந்தும் Career Guidance கேட்டுத் தொடர்பு கொள்கிறார்கள். என் டீமில் தில்லியில் வேலை செய்த ஒருவருக்கு விப்ரோ மும்பையில் வேலை கிடைத்த போது சேருமாறு அறிவுருத்தி அனுப்பிவைத்தேன். நான் அவரின் Reporting Manager ஆக இருந்தாலும் நான் Rational ஆக
முடிவெடுப்பேன் என்ற நம்பிக்கையில் என்னிடம் அறிவுரை கேட்டார். அதே நண்பர் பின்னர் ஒருநாள் விப்ரோவிலிருந்து வேறொரு கம்பெனிக்கு மாறட்டுமா என்று கேட்ட போது
வேண்டாமெனத் தடுத்தேன். ரெண்டு நிகழ்விலும் SWOT Analysis தான் முடிவு செய்ததே தவிர கம்பெனி மீதான காதல் அல்ல.


An Organization is any day bigger than an Individual.If Dhirubai Ambani is replaceable in Reliance and if Narayanamurthy is replaceable in Infosys, No one is indispensible in any organization. But Anil and Mukesh can never replace their father.

என்னைப் பொருத்தவரையில் ஒருவர் நல்லா வேலை செய்யும் வரையில் கம்பெனி அவரை வைத்துக் கொள்ளும். வேலை செய்வதில் சுணக்கம் ஏற்பட்டாலோ, கம்பெனியின் நிதி
நிலைமை சரியா இல்லாமல் போனாலோ அவ்வளவு ஏன் கம்பெனியின் நிர்வாகம் மாறினாலும் அவரை வேலையை விட்டு அனுப்ப ஒரு கணம் கூட தயங்காது. அப்படி இருக்கையில்
Employee மட்டும் ஏன் நிறுவனத்தின் மீது காதல் கொள்ள வேண்டும்?

"Love your profession but never fall in love with your company" இது நாராயண மூர்த்தி அவர்கள் சொன்னதாக வெளிவந்தது. அவர் என்ன அர்த்ததில் இதைச் சொன்னாரெனத் தெரியாது. என்னளவில் இதுக்கு அர்த்தம் - Job Satisfaction மற்றும் சம்பளம் ரெண்டும் சரி விகிததில் இருக்கும் வரை வேலை செய். இது மாறும் போது வேறு வேலை தேடு. சில வேலைகளில் சந்தோஷம் அதிகமாகவும் சம்பளம் குறைவாகவும் சில வேலைகளில் இது மாறியும் இருக்கும், Trade-off நீங்கதான் முடிவு செய்யணும். உங்கள் மீதும் செய்யும் வேலையின் மீதும் (Profession) காதல் கொள்ளுங்கள். நிறுவனத்தின் மீதல்ல. எண்ணங்களும் கொள்கைகளும் கோட்பாடுகளும் வேவ்வேறாக இருந்தால் (Yours and company's) வேறு வேலை தேடுவது நலம்.


“It is not the employer who pays the wages. Employers only handle the money. It is the customer who pays the wages.”
இது ஹென்றி ஃபோர்ட் சொன்னது. நெறய பேர் முதலாளி சம்பளம் கொடுப்பதாக நினைக்கிறார்கள். கஸ்டமர்கள் வாங்குவது குறைந்து பண வரவு குறைந்தால் முதலாளி
சொந்தப் பணத்தில் இருந்து எடுத்துக் கொடுக்க மாட்டர், ஆட்குறைப்புதான் செய்வார். நிலைமை இப்படி இருக்கையில் நாம் மட்டும் ஏன் வேலையைக் காதலித்து நல்ல வாய்ப்புகளை விட வேண்டும்?

அதே போல பணத்தின் பின்னால் ஓவரா அலைந்து வாழ்க்கையை அனுபவிக்காமல் விடுதலும் தவறே. There is no point in being the richest man in the grave yard, you cannot do any business from there - இது புரிஞ்சா போதும். Work - Family Balance தன்னால வரும்.

அம்புட்டுதேன் நம்ம கருத்து, ஒரு நல்ல விவாதத்தைத் துவக்கி வைத்த நண்பர் ராம்ஜி யாஹூ வுக்கு நன்றி.

Thursday, December 9, 2010

கனவு தேசத்தில் கணினி வாழ்க்கை : பகுதி 8

முந்தைய பகுதிகள்

ஒரு நல்ல சேதி மற்றும் ஒரு எச்சரிக்கை

தமிழ்மண நட்சத்திர வாரத்தில் நீங்க எல்லாரும் வழங்கி வரும் ஆதரவுக்கு நன்றி.


கனவு தேசம் தொடரின் இப்பகுதியில் தற்போதைய நிலையில் இருக்கு ஒரு நல்ல விசயத்தையும் ஒரு பிரச்சனைக்குறிய விசயத்தையும் பாக்கலாம்

மொதல்ல நல்ல விசயம். அமெரிக்காவில் IT Contracting Job Market இப்போ ரொம்ப நல்லா இருக்கு. கடந்த அஞ்சு ஆறு மாசமாகவே நெறய காண்ட்ராக்டிங் வேலை வாய்ப்புகள் அதிகமாகிக்கிட்டு இருந்து வருது. Recession க்கு அப்புறம் பொதுவா கம்பெனிகள் Full Time ஆட்களை வேலைக்கு எடுப்பதை விட Temporary Staffing
என்று சொல்லப்படும் Contracting Resources களை வேலைக்கு அமர்த்துவது வழக்கமே.

2010ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல், மே, ஜூன்) முன்னேற்றத்தின் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன. மூன்றாம் காலாண்டில் (ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்)
அதிக அளவில் வேலை வாய்ப்புகள் வந்துள்ளன. 2009ம் மூன்றாம் காலாண்டை விட 2010ன் மூன்றாம் காலாண்டில் 15 சதவீதம் அதிக வேலை வாய்ப்புகள் வந்துள்ளன. அதிக அளவில் டெக்னாலஜி கம்பெனிகள் அமைந்துள்ள கலிபோர்னியாவில் அதிக அளவு Recruitment நடந்திருக்கு.

இடங்களைப் பொருத்த வரையில் இதில் டாப் டென் இடங்களைப் பெற்ற இடங்கள் - கலிஃபோரினியா, நியூ ஜெர்ஸி, நியூ யார்க், டெக்ஸாஸ், இல்லினாய்ஸ், பென்சில்வேனியா,
வர்ஜினியா, ஜார்ஜியா, Massachusetts (அதாங்க எங்க ஊரு -இத தமிழ்ல எழுதுறது ரொம்ம்ப கஷ்டம்), மற்றும் ஃப்ளோரிடா.


டெக்னாலஜியைப் பொருத்த முறை, ஜாவா Requirements அதிக அளவில் வந்திருக்கு - 14 சதவீதம், அடுத்த ஹாட் டெக்னாலஜி Dotnet - 10%. SAP க்கும் System Admin க்கும் இதே அளவில் (10%) வேலை வாய்ப்புகள் வந்திருக்கு. QA - 8%, Data Warehousing / ETL - 7%, Oracle Apps- 5%, ப்ராஜக்ட் மேனேஜர் - 5%, Reporting Tools - 5%, Database Developers - 5%, Business Analysts - 4%, DBA = 4%, Web / Internet - 3%, People Soft - 3%, Siebel - 2%, Mainframe - 1%, Middleware - 1%, C and C++ - 1%, Mobile Applications - 1% மற்றும் Unix - 1% என்கிற விகிதங்களில் Requirement வந்துள்ளன.

ஒரு விசயம் ரொம்பத் தெளிவாத் தெரியுது. ஜாவா, Dotnet, Oracle போன்ற டெவலப்மென்ட் டெக்னாலஜிக்கும் சிஸ்டம் அட்மின்களுக்கும் இப்போதைய மார்க்கெட் நிலவரத்தில் அதிக டிமாண்ட் இருக்கு. இந்த டெக்னாலஜியில இருக்கும் IT மக்கள், ப்ராஜக்ட் மாற்ற நினைத்திருந்தால் அதுக்கு இது உகந்த நேரம்.

தற்போதைய நிலை ப்ராஜக்ட் மாத்துறதுக்குக்கு உகந்ததாக இருந்தாலும் H1B ல இருக்கும் மக்கள் இந்தியா செல்வதற்கு இது உகந்த நேரமல்ல.

H1B visa stamping செய்வதில் தற்போது சிக்கல்கள் இருப்பதாகத் தெரியவருகிறது. இந்தியாவில் இருக்கும் அனைத்து எம்பஸிகளிலும் கோவில் பிரசாதம் போல H1B stamping செய்ய செல்லும் அனைவருக்கும் Blue Paper என்றழைக்கப்படும் Form 221G (Request for More documents) வழங்கப் படுகிறது. பல பேருக்கு Visa Rejection கூட நடக்கிறது. ஸ்டாம்பிங் தேவைப்படுவோர் தற்போது இந்தியா செல்வதைத் தவிர்ப்பது நலம். ஸ்டாம்பிங் இருந்தாலும் Port of Entry யிலும் பல கேள்விகள் கேட்டு
Deport செய்வதும் நடந்து வருகிறது. ஏதொரு முக்கிய காரணமும் இல்லாமல் இந்திய விடுமுறை ப்ளான் பண்ணியிருக்கும் நண்பர்கள் பயணத்தைக் கொஞ்சம் ஒத்திப் போடுங்க.
மேலதிக விவரம் தேவைன்னா தனி மடல் அனுப்புங்க, கூப்பிடறேன். நிலைமை சகஜமானதும் அப்டேட் பண்றேன்.

தத்துபித்துவங்கள் இருபது

நேத்து பிடிக்காத பத்து அதுக்கு முன்னாடி பிடிச்ச பத்து, இன்னிக்கு தத்து பித்துவங்கள் இருபது. ரெண்டு நாளா கொஞ்சம் சீரியஸா டிஸ்கஷன் போச்சு, அடுத்ததும் அமெரிக்க
காண்ட்ராக்ட் வேலை நிலவரம் பத்தி சீரியஸா வருது. எனவே நடுவுல ஒரு கெக்கே பிக்கே காமடி.பொருத்தருள்க.

1. நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க முடியாது.

2. ஸ்கூல் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... காலேஜ் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... ஆனால் ப்ளட் டெஸ்ட்லே பிட் அடிக்க முடியாது.

3. ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு

4. என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும்.

5. காசு இருந்தா கால் டாக்சி!! காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!!

6. பல்லு வலின்னா பல்லைப் புடுங்கலாம். ஆனா கண்ணு வலின்னா கண்ணைப் புடுங்க முடியுமா?

7. இட்லி பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம். ஆனா மூக்குப் பொடியைத் தொட்டு மூக்கை சாப்பிட முடியாது.

8. பாண்ட் போட்டு முட்டிப்போட முடியும். ஆனா முட்டிப் போட்டு பாண்ட் போட முடியுமா?

9. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

10. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.

11. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது

12. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.

13. என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.

14. நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.

15. க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?

16. ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.

17. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.

18. செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.

19. ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது.

20. என்னதான் உயர பறந்தாலும் கொசுவை பறவை லிஸ்டில் சேர்க்கமுடியாது

தத்துபித்துவங்கள் கண்டெடுத்தது இணையத்தில், மூழ்கி முத்தெடுத்தவர் : “என்றும் அன்புடன்” பாஸ்டன் ஸ்ரீராம்