Saturday, July 2, 2011

அமெரிக்கா வந்து எவ்ளோ நாள் ஆச்சு?

நண்பர் இளா கொசுத்தொல்லைன்னு ஒரு இடுகை போட்டிருந்தார். அதில் NRI மக்களை இந்தியா பார்க்கும் விதத்தில் இருக்கும் மாற்றங்களை சொல்லியிருந்தார். அதே மாதிரி அமெரிக்க வாழ் NRI மக்கள் எப்படி மாறிப் போகிறார்கள் என்று ஓர் இடுகை.

மொச பிடிக்கிற நாயை மூஞ்சை பார்த்தா தெரியும்னு சொல்றது மாதிரி NRI மக்களின் செய்கைகளை வச்சு அவங்க அமெரிக்கா வந்து எவ்ளோ நாள் ஆச்சுன்னு
சொல்லிடலாம்.

ஆங்கிலம் : அமெரிக்கா வந்து இறங்கியதும் முதல் ஷாக் இவங்களோட உச்சரிப்பு. இங்கிலிபீசில நான் சேக்ஸ்பியர் லெவல்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தவனுக்கு அமெரிக்கர்களின் ஆங்கில உச்சரிப்பு கிர்ர்ரட்டிக்கும் அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சிக்கிட்டு அத்தோட நிக்காமல் அமெரிக்கா நுனி நாக்கு ஆங்கிலம் பேச முயன்று கேவலமா தோத்துப் போவாங்க. (அமேரிக்க அக்சென்ட் வெகு சிலருக்கே வரும், இங்கே பிறந்த / வளரும் குழந்தைகள் அட்டகாசமா பேசும்).

சரி நமக்கு உச்சரிப்புதான் வாய்க்கலை, அவர்கள் உபயோகிக்கும் பதங்களை உபயோகிக்க ஆரம்பிப்பது அடுத்த லெவல்.

யாராவது How Are you ன்னு கேட்டா I am fineன்னு சொல்லியே பழக்கப்பட்ட நாம I am Good என்று சொல்ல ஆரம்பிப்போம். ஏதாவது ஒரு விசயத்துக்கு தயாரான்னு கேட்டா I am Ready என்று சொல்லாமல் I am all set என்றே சொல்லுவோம்.

நண்பர்களை டேய் என்று அழைக்காமல் DUDE என்று அழைக்கத் தொடங்கும்போதும் இந்தியாவில் இருப்பவரிடம் தொலை பேசும்போது Sounds Good என்று சொல்லி மறு முனையில் இருப்பவர் நம்ம குரல் அவ்ளோ நல்லாவா இருக்குன்னு குழம்பி அவரை சுத்தலில் விடும்போது பார்ட்டி அமெரிக்கா வந்து சில பல வருஷங்கள் ஆச்சுன்னு தெரிஞ்சிக்கலாம்.

சாப்பாடு : அரிசியும் கோதுமையுமே மனுஷன் சாப்பிட உகந்தவை. சாலட் என்பது இலையும் தழையும், அது ஆடு மாடு சாப்பிடும் வஸ்து, மேலும் வெஜிடபிள் சாலட் என்பது முழு சாப்பாட்டுக்கு முன் சாப்பிடுவது, பர்கர் என்பது
இரண்டு முழு சாப்பாடுகளுக்கு இடையில் பொழுது போக சாப்பிடுவது - இதெல்லாம் ஊருக்கு வந்த புதுசில் அடிக்கும் கமெண்டுகள்.

தினமும் ஆபிஸுக்கு வீட்டு சாப்பாடு எடுத்துப் போக முடியல, பக்கத்தில இந்தியன் ரெஸ்டாரண்ட் எதுவும் கிடையாது- சூப், சாண்ட்விச், பர்கர், சாலட் இதுல ஏதாவது சாப்பிட்டு அட்ஜஸ்ட் பண்றேன் - இது வந்து ஓரிரு வருஷங்கள் ஆன நிலை.

விடுமுறை நாட்களிலும், நண்பர்கள் வீட்டுக்குப் போனாலும் - I eat only Salad and Soup for Lunch and Dinner, Rice and Wheat are full of Carbs you know!!!இப்போ ஐயா அமெரிக்கன் ஆகிட்டாருன்னு அர்த்தம்.


பண விஷயம்:

சில்லரைக் காசு அமெரிக்கா வந்த புதுசில் குழம்ப வைக்கும் இன்னொரு விசயம் - நாணயங்கள்.

ஊருக்குப் புதுசு : ஐந்து செண்டுக்கும் பத்து செண்டுக்கும் வித்தியாசம் தெரியாத நிலை, அதிலும் முக்கியமா ஐந்து செண்ட் பத்தை விட பெரிசா இருப்பது இன்னும் குழப்பும்.

ஓரிரு வருஷங்கள் ஆன பின்: அமெரிக்க நாணயங்களின் ஷேப்பும் மதிப்பும் நல்லாவே பழக்கமாகியிருக்கும், அத்துடன் பென்னியும் நிக்கலும் டைமும் நாலணா எட்டணா போல பழகியிருக்கும்.

அமெரிக்காவில் செட்டில் ஆயாச்சு : தெருமுனைக் கடைகளில் தரும் மீதப் பணத்தில் ஒரு செண்ட்களை எடுக்காமல் விட்டு விட்டு வர ஆரம்பிக்கும் போது அமெரிக்காவில் செட்டில் ஆயாச்சுன்னு தெரிஞ்சிக்கலாம்.

$ to ரூபாய் :

ஊருக்குப் புதுசு : எல்லாப் பொருட்களின் விலையையும் ரூபாயில் கன்வெர்ஷன் செய்து கவலைப் படுவது அமெரிக்கா வந்ததும் வரும் ஹாபி. ஒரு ப்ளேட் இட்லி 250 ரூபாயா? ஒரு தோசயின் விலை 500 ரூபாயா என்று சரியா சாப்பிடதா பலருண்டு இங்க.

ஒரிரு வருஷங்கள் ஆச்சு : கன்வெர்ஷன் மோகம் போயாச்சு. Your home is where you live என்பதை நம்பத்தொடங்கி பொருட்களை சகஜமாக வாங்கத் தொடங்கியிருப்போம்.

செட்டில்ட் இன் அமெரிக்கா : இவங்களை இந்திய விசிட்டின் போது தெரிஞ்சிக்கலாம் - அங்கு துணிமணி வாங்கும் போதோ, கலைப் பொருள் வாங்கும் போதோ - ஆயிரம் ருபாய் அப்படினா கிட்டத்தட்ட இருபது டாலர் அப்படின்னு சொன்னா பார்ட்டி அமெரிக்க செட்டில்ட்னு தெரிஞ்சிக்கணும்.


வீடு தேடும் படலம்:

அமெரிக்கா வந்திறங்கியது தேடும் அப்பார்ட்மெண்டில் நாம் எதிர்பார்க்கும் விசயங்கள் : வாடகை கம்மியாகவும் இந்தியர்கள் நிறையவும் இருக்கும் குடியிருப்பு, ட்ரெயினுக்குப் பக்கத்தில் இருக்கணும் (அப்பத்தான் கார் இல்லாம காலத்தை ஓட்ட முடியும்), இந்தியக் கடை மற்றும் வால்மார்ட் அருகில் இருப்பது அவசியம்.

வாடகை அதிகமானாலும் பரவாயில்லை- நல்ல தரமான அப்பார்ட்மெண்ட் வேணும், காரில் ஆபிஸ் போய் வர வசதியா இருக்கணும், தேசிக்கள் அதிகமா இல்லாம இருக்கணும் (ஒரே பாலிடிக்ஸ் யூ நோ!!)- இப்படியெல்லாம் டிமாண்ட் வச்சா அமெரிக்கா வந்து ஓரிரு வருஷங்கள் ஆச்சுன்னு அர்த்தம்.

ரியல் எஸ்டேட் ப்ரோக்கரிடம் மூணு நாலு லட்ச டாலர் விலைக்கு நல்ல வீடு பார்க்கச் சொல்லி - நல்ல டவுனா இருக்கணும், Excellent School District, க்ரைம் ரேட் கம்மியா இருக்கணும், Unemployment, diversity அப்படின்னு பெரிய Requirement லிஸ்ட் கொடுத்தால் அமெரிக்காவில் மொத்தமா செட்டில் ஆயாச்சுன்னு அர்த்தம்.

விசா: வாழ்க்கை ஒரு வட்டம் என்பதற்கு இந்தியர்களும் அமெரிக்கக் குடியுரிமையும் சிறந்த உதாரணம்.

இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையான பொட்டி தட்டும் மக்களின் கனவு H1B Visa. அமெரிக்கா வந்திறங்கியதும், ஷார்ட் டெர்ம் விசிட்டை லாங் டெர்ம் ஆக்குவதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப் படும்

விசாவும் நீண்ட நாள் தங்கும் ஆசையும் நிறைவேறியதும் அடுத்த இலக்கு பச்சை அட்டை (Green Card) மிக நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட வரிசையில் இணைந்து இதற்காக பலவருடங்கள் காத்திருப்பது இடைப்பட்ட நிலை.

பச்சை அட்டை கிடைத்து ஐந்தாண்டுகளில் அமெரிக்கக் குடியுரிமை அடுத்த இலக்கு. அமெரிக்கா வந்து பத்தி பதினைந்து ஆண்டுகள் விசாவையும், பச்சை அட்டையையும், குடியுரிமையும் துரத்தி கடேசில எல்லாம் கிடைச்சப்புறம், செட்டிலானபின், I am going back to India for Good என்பது உச்சகட்டக் கொடுமை.

நான் இப்போது பெரும்பான்மையான விசயங்களில் ரெண்டாவது கேட்டகரியில் இருக்கிறேன்.


இவை தவிர நீங்க நினைக்கும் மத்த விசயங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்