Sunday, August 21, 2011

தாய்மை தானம்

வியாழக் கிழமை சாயந்திரம் நாலு மணிக்கு அலுவலகத்தில் மும்முமராய் வேலை செஞ்சிக்கிட்டு இருந்த போது (சொன்னா நம்பணும், சிரிக்கப் படாது), ”Wife Calling" என்றது கைப்பேசி. சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவியா? கட் ஆஃப் டையத்துக்கு முன்னாடி கொரியர் அனுப்பனும், நாளைக்குள்ள போய்ச் சேரலேன்னா சனி ஞாயிறு கொரியர் ஆபீஸ்ல தங்கிடும். யாருக்கும் உபயோகம் இல்லாமல் போயிடும், பட்ட கஷ்டம் வீண் என்று பாடம் நடத்தப் பட்டது.

ஆபிஸ்லேருந்து வீட்டுக்குப் போக பத்து நிமிஷம், பார்சல் எடுத்துக்க ஒரு அஞ்சு நிமிஷம் வீட்லேருந்து ஒரு கொரியர் ஆபிஸ் ஒரு அஞ்சு நிமிஷம் எப்படியும் ஒரு இருபது நிமிசத்தில் போயிடலாம் இன்னும் நெறய நேரமிருக்குன்னு கணக்கு போட்டது கார் டிரைவர் மனசு.மவனே இதுல ஏதாச்சும் மிஸ் ஆகி பல்பு வாங்கினா ஆப்பு பலமா இருக்கும்டி என்று எச்சரித்தது “ப்ராக்டிகல் புருஷன்” மனசு. ரெண்டாவது மனசு ஜெயித்ததுன்னு தனியா வேற சொல்லணுமாக்கும். உடனே Fedex ஆபீஸுக்கு போன் பண்ணி cut off time என்னன்னு கேட்டேன், ஆறரை மணி என்றது அந்த முனையில் இருந்த வெள்ளையம்மா. சீக்கிரமா கொண்டாந்தா சீக்கிரமா அனுப்பிடுவீங்களான்னு கேணத்தனமா கேட்டேன். முழு கண்டெய்னர் அளவுக்கு பொருள் இருந்தாத்தான் தனி ஷிப்மெண்ட்னு நக்கலா விளக்கமான்னு புரிஞ்சிக்க முடியாத ஒரு தொனியில் பதில் வந்தது. “நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை எனக்கு”ன்னு சொல்லிட்டு ஆபிஸ் வேலைகளை முடிச்சு அஞ்சு மணிக்கு கெளம்பி வீட்டுக்குப் போனா பார்சல் தயாராகலை. ஏன்னு கேட்டதுக்கு தங்கமணி, உன்னைய நம்பி நான் பேக் பண்ணி வச்சிட்டு உக்காந்திருந்தா நீ அன்னிக்குத்தான் ஆணி அதிகம்னு சீன் போட்டு லேட்டா வருவ , என்னிக்கு நான் தயாரா இல்லையோ அன்னிக்குத்தான் நீ சரியான நேரத்துக்கு வருவ, அதனாலதான் அதை ஃபிரீசர்லேந்து எடுக்கலன்னு சொன்னா. அரக்க பறக்க ஃப்ரீசர் பேக்கை எடுத்து பேக் பண்ணி, பிரிபெய்டு லேபில் ஒட்டி பார்சலை எடுத்துக்கிட்டு ஓடினேன்.

Fedex ஆபிஸ் போன பொது மணி ஆறு. கவுண்டரில் இருந்த உயர்ந்த மனிதனிடம் இந்த பார்சல் நாளைக்கு கண்டிப்பா போயிடுமா அதில் உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா இப்பவே சொல்லிடு, இப்ப போயிட்டு திங்கக் கிழமை திரும்ப வர்றேன்னு சொன்னேன். Over Night Shipping கண்டிப்பா நாளைக்குப் போயிடும், ஆமா எதுக்கு இவ்வளவு கேக்கறே, அப்படி அதுல என்னதான் இருக்கு தங்கம் அல்லது ஏதாவது விலை உயர்ந்த பொருள் அனுப்பறியான்னு கேட்டான். அதுக்கு நான் இதுக்குள்ள இருப்பதுக்கு விலையே நிர்ணயம் பண்ண முடியாது, தங்ககத்தை விலை கொடுத்து வாங்கிக்கலாம் இதுக்குள்ள இருப்பதை நீயோ நானோ என்ன பண்ணாலும் உருவாக்க முடியாது என்றேன். Hmm, what is so precious 'bout it என்று என்று கேட்டுக்கொண்டே பார்சலின் மீது இருந்த National Milk Bank பேரைப் பார்த்த அவர் ஒ உள்ளே தாய்ப்பால் இருக்கா? இப்ப புரியுது உன் அக்கரைக்குக் காரணம் என்றார். உன் மனைவிக்குத்தான் எவ்வளவு தாராள குணம் அவருக்கு என் வாழ்த்துக்களைத் தெறித்துவிடு, தாய்ப்பாலை தானம் செய்யும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைப்பதில்லை, கிடைப்பவர்கள் எல்லோரும் தானம் செய்வதில்லை என்றார்.

அதுவரை இந்த விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டாத எனக்கு அவர் சொன்னதைக் கேட்டதும் பெருமை பிடிபடலை. ஆம் அந்த பார்சலில் இருந்தது 250 Ounce கிட்டத்தட்ட 7.5 லிட்டர் தாய்ப்பால். அது ஒரு பிறந்த குழந்தைக்கு இரண்டு வாரங்களுக்கான உணவு. தாய்ப்பாலின் மகத்துவம் பற்றி இம்சை அரசி இங்கே எழுதியிருக்கிறார்.பிறந்து ஆறு மாதங்களுக்கு வெறும் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி பெறுகின்றன என பல மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன. குழந்தை பெற்ற தாய்மார்களில் பலருக்கு தேவையான அளவுக்கு பால் சுரப்பதில்லை, அதில் ஒரு சில குழந்தைகளின் பசியை என் மனைவி போக்கியிருக்கிறாள், அதை கொண்டு சேர்த்த புண்ணியத்தை நான் கட்டிகொண்டேன். பகிர்ந்தளிக்கும் அளவுக்கு வழங்கிய கடவுளுக்கு நன்றியையும, பகிர்ந்த என் மனைவிக்குப் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


இது கண்டிப்பா தம்பட்டம் அடிக்க அல்ல. ரத்த தானம், கண்தானம், உறுப்பு தானம் பற்றி நம்மில் பலருக்குத் தெரியும், பலர் செய்தும் வருகிறோம். தாய்ப்பால் தானம் பற்றிய அறிதல் மிகக் குறைவு, அதற்காகவே இப்பதிவு. இதைப் படிக்கும் யாரேனும் ஒருவர் இன்னொரு தாய் தன்னிடம் உபரியாக இருக்கும் தாய்ப்பாலை தானம் செய்யத் தூண்டினால் அதுவே போதும்.

இதுக்காக என் மனைவி, National Milk Bank இடம் கேட்டது எங்க மகள் பெயரில் ஒரு ThankYou Note. தனக்கு மட்டுமே உரித்தான சொத்தை அவள் சக குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறாள், இது அவளுக்கு இன்று புரியாது. விவரம் புரியும் போது விளக்கி இந்த ThankYou Note காட்ட எண்ணம். "சந்தோஷங்களில் பெரிய சந்தோஷம் அடுத்தவங்களை சந்தோஷப் படுத்திப் பாக்கறதுதான்" இதை எங்க மகளின் மனதில் விதைக்க எண்ணியுள்ளோம்,
நீ பிறந்ததிலிருந்தே உனக்கானதை பகிர்ந்தவள் என்று சொல்லி புரியவைக்க இது உதவியா இருக்கும்.

அமெரிக்காவில் இதை National Milk Bank என்ற சேவை நிறுவனம் செய்து வருகிறது (www.nationalmilkbank.org). நீங்க தயாரா இருந்தாலும் அவர்கள் உடனே பெற்றுக் கொள்வதில்லை, முதலில் தாயின் ரத்தத்தைப் பரிசோதனை செய்து பாக்கறாங்க, பின்னர் தாயின் மருத்துவரிடமும் குழந்தையின் மருத்துவரிடமும் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்று அவங்களுக்கு அனுப்பனும். அப்புறம்தான் ஃப்ரீசர் பேக்கை அனுப்புவாங்க. குறிப்பிட்ட அளவு பால் சேர்ந்ததும் அவங்க செலவில் கொரியர் அனுப்பிடலாம். யாரிடமிருந்து பெறப்பட்டது யார் யாருக்கு வழங்கப் பட்டது போன்ற தகவல்கள் ரகசியமாக வைக்கப் படுகின்றன.

வாய்ப்பும், விருப்பமும் இருப்பவர்கள் உபரி தாய்ப்பாலை தானமாக வழங்கலாம், வாய்ப்பில்லாதவர்கள் இந்நிறுவனத்துக்குப் பொருளதவி வழங்கலாமே !!!