Monday, October 17, 2011

கலைச் சேவை

2010ம் ஆண்டின் வசந்த காலத்தில் ஒரு அழகிய மாலைப் பொழுது. வேலை முடிந்து வீட்டுக்கு வந்து முகம் கழுவி ஜிம்முக்கு செல்ல எத்தனித்த போது அலறியது அலைபேசி. எடுத்துப் பேசிக் கொண்டே ஜிம்மை நோக்கி நடந்தேன். நான் நியூ ஜெர்சியிலிருந்து இளா பேசறேங்க, "சீமாச்சு" வாசன் நம்பர் குடுத்தார் என்றது அந்தப் பக்கக் குரல். சிலரை முதல் முறை பார்க்கும் போதே காரணம் ஏதுமின்றி பிடித்துப் போகும், இளாவுடன் முதல் முறை பேசினாலே
அவரைப் பிடித்துப் போகும் - அப்படிப்பட்ட நட்பான பேச்சு அவருடையது. நட்பு கொள்ளத் தூண்டியது நண்பர்களானோம்.

நான் வேலை செய்யும் நிறுவனத்தில் அவர் சேர்ந்ததும்,அதுக்காக பாஸ்டன் மாநகருக்கு மாறி வந்ததும்,பின்னர் நாங்களிருவரும் ஒரே குடியிருப்பில் இருப்பதும்,எங்களுக்கு குழந்தை பிறந்த போது Support சிஸ்டத்தில் அவர் முக்கியமானவராக இருந்ததும் வரலாறு.

அன்று மட்டும் அந்த போன் கால் வராமல் இருந்திருந்தால், தமிழ்த் திரையுலகம் ஒரு நல்ல கலைஞனை அடையாளம் காணாமலே போயிருக்கும் - இது எனக்கே ரொம்ப ஓவரா இருக்கு, எனவே நேர மேட்டருக்குப் போயிடுவோம்.


ஒரு நாள் இளா போன் பண்ணி ஷார்ட் ஃபிலிம் ஒண்ணு பண்றோம் நடிக்கிறீங்களா என்றார். என்ன விளையாடறீங்களா இளா, எனக்கு நடிக்கவெல்லாம் வராது என்றேன். விடாக் கண்டனாக அவரோ யார் யாரோ நடிக்கறாங்க, நீங்க ஏன் நடிக்கக் கூடாது மேலும் நீங்க பண்ணப் போறது "சார் போஸ்ட்" அளவுக்கு சின்ன ரோல்தான் என்றெல்லாம் சொல்லி சம்மதிக்க வைத்து விட்டார்.

ஒன் லைனை மெருகேத்தினா திரைக் கதை வரணும், எங்க விசயத்தில் வேற கதை வந்தது. மொதல்ல நாங்க பேசின சப்ஜெக்ட்டை விட இது கேட்சியா இருந்ததால் இதையே முடிவு பண்ணோம். எங்களுக்குள் இருந்த புரிந்துணர்வு ரொம்ப உதவியா இருந்தது. இந்த டயலாக் நல்லா இல்லை நான் பேசமாட்டேனெல்லாம் எங்க டைரடக்கர்கிட்ட சொல்லலாம் - அவ்ளோ நல்லவர் அவர்.

இந்த குறும்படம் எங்களுக்கு முதலிரவு மாதிரி - பங்கேற்று இருக்கும் மூவருக்கும் (இளா, நான் மற்றும் ஜெயவேலன்) இதுதான் முதல் அனுபவம். எனவே பிழைகளை பொருத்தருள்க, அடுத்த படத்தில் பிழைகள் வெளியில தெரியாத மாதிரி பாத்துக்கறோம்.

படம் எடுக்க முடிவு பண்ண நாளிலிருந்து ஊண் உறக்கம் இல்லாமல் படத்தைப் பத்தியே யோசித்து, பேசி,கதா பாத்திரமாகவே மாறி, படம் முடிவதற்குள் பத்து கிலோ உடல் எடை குறைந்து - இப்படியெல்லாம் சொல்லணும்னு ஆசைதான் ஆனா விளையாட்டா பேசி, விளையாட்டா எடுத்த படம் இதோ உங்க பார்வைக்கு.




படத்தைப் பார்த்தாச்சா? பாராட்ட நினைப்பவர்கள் எல்லாம் பின்னூட்டத்தில் பாராட்டலாம், திட்டணும்னு நெனச்சா என்னையும் இளாவையும் கோத்து விட்ட "சீமாச்சு" வாசனையோ என்னையெல்லாம் நடிக்க வைக்கலாம்னு நெனச்சஇளாவையோ தாராளமா எவ்வளவு வேணா திட்டலாம். ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்க தப்பாவே எடுத்துக்க மாட்டாங்க. இதெல்லாம் போதாது காரி துப்பியே ஆகணும்னு நெனைக்கறவங்க வசதிக்காக:



வேறு எந்த பேனரிலும் ஒரு வருஷத்துக்கு நடிக்கக் கூடாதுன்னு டைரடக்கர் கட்டளை. எனவே காலேஜ் சப்ஜெக்ட் ஹீரோ, அமெரிக்க மாப்பிள்ளை போன்ற எந்த ரோல்களையும் ஒத்துக் கொள்ள முடியாத கையறு நிலையில் இருக்கேன். நாந்தான் நடிக்கணும் இல்லைனா படமே எடுக்க மாட்டேன்னு யாரும் அடம் பிடிக்க வேண்டாம், என்னால தமிழ்த் திரையுலகம் ஒரு வருடம் ஸ்தம்பித்துப் போவதை நான் அனுமதிக்க முடியாது.. நீங்க கல்லை எடுக்கறதுக்கு முன்ன நான் அடுத்த ஷூட்டிங்குக்கு ஜூட்...