Saturday, December 11, 2010

நன்றி நண்பர்களே:

கடந்த ஏழு நாட்களாக என்னை தமிழ்மண முகப்பில் பொறுத்துக்கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றி. வாய்ப்பளித்த தமிழ் மண நிர்வாகிகளுக்கும் முக்கியமாக சங்கர பாண்டி ஐயாவுக்கும் மிக்க நன்றி.

டிசம்பர் 12 - தமிழ் நாட்டின் இரண்டாம் தீபாவளி - ரஜினியின் பிறந்த நாள். கமல் ரசிகனான எனக்கு இத்தினம் வேறு வகையில் முக்கியமானது. இன்று எங்களுடைய பதினோறாவது
ஆண்டு மணநாள்.

ஒரே ஒரு வாரம் என் மூஞ்சியை பொறுத்துக் கொள்ளுவது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பதை உங்கள் மூலமாக உணர்ந்தபின், பதினைந்து வருடமாய் பின் தூங்கி முன் எழுந்து சகித்துக் கொண்டிருக்கும் என் சகதர்மினிக்கு இந்த பதிவில் நன்றி சொல்வது என் தலயாய கடமையாய் உணர்கிறேன். ஒரு வார கஷ்டத்தை அனுபவித்த நீங்களும் ஆட்சேபனை ஏதும் சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன். (நஞ்சப்பா...கடேசி பெஞ்சுல ஒராள் ஆட்சேபணையா புருவத்த சுருக்கறான் பாரு..அமுக்கிப் போடேய்)

சகதர்மினி, அவர், இவர், நன்றி என்றெல்லாம் கூவுவது எனக்கே ரொம்ப அன்னியப்பட்டாலும், மைக் பிடித்தால் கடமை தவறா மோகன் பரம்பரை என்ற வகையில்...பாஸ்டன் கவுண்டிங் ஸ்டார்ட்ஸ்... (அவர் இவர்ன்னு கூப்பிட்டா அடுத்த வூட்டு அம்மணியைக் கூப்பிடுற மாதிரி இருக்கு என்பதால் அவள் இவள்ன்னே செல்லமாய் கூப்பிடுக்கிறேன். பெண்ணியவாதிகள் ஓரமா குந்திகினு ஜோடா குடிங்கப்பா ப்ளீஸ்)

முதல் நன்றி பதினஞ்சு வருசத்துக்கு முன்ன சொன்ன காதலை ஏத்துக்கிட்டு, சரித்திரத்தில் நானும் ரவுடி என்று பதிவு செய்ய உதவியதற்காக.

அடுத்த நன்றி அடுத்த நாலு வருசத்தில் போட்ட சண்டைகளில் விட்டுக் குடுத்த மாதிரி நடித்து நான் பெரிய தாதா என்று அதே சரித்திரத்தை திருத்தி எழுதியதற்காக.

அப்பாலிக்கா கல்யாணத்துக்கும், அதுக்கும் மேல பதினோரு வருசமா என்னைப் பொறுத்துக் கொண்டதுக்கும், சென்னையை விட்டு வெளியே போக மாட்டேன் என கிணற்றுத் தவளையாக
இருந்த என்னை தில்லி ஆஃபரை எடுத்துக்கச் சொன்னதுக்கும்,என்னை அமெரிக்கா அழைத்து வந்ததுக்கும் அப்படின்னு ஒவ்வொண்ணுக்கா அவளுக்கு நன்றி சொல்லணும்னா, இன்னும்
ஒரு மூனு வாரம் நான் மட்டுமே தமிழ்மண ஸ்டாராக ஓட்டவேண்டியிருக்கும். (சங்கர பாண்டி ஐய்யா அப்பிடியே ஓடிப் போயிடுன்னு சொல்லிட்டார் அவ்வ்வ்வ்)

நான் இதுவரை எடுத்த முடிவுகளிலேயே மிகச்சிறந்த முடிவுகள் இரண்டு, ஒன்று என் இன்றைய மனைவியை 15 வருஷத்துக்கு முன்னர் காதலியாக்கிக் கொண்டது மற்றது 2002 இல் புதுதில்லிக்கு சென்றது. 'comfort zone'-ஐ விட்டு வெளியே வந்தால் தான் உலகம் எவ்வளவு பெரிசுன்னு தெரியும். "A ship is safe in harbor, but that's not what ships are for"ன்னு சும்மாவா சோக்கா சொன்னாங்க? நானும் என்னுடைய 'comfort zone'-ஐ விட்டு வந்தப்புறம்தான் என்னுள் பலப்பல மாற்றங்கள். நான் அன்று தயங்கிய போது என் மனைவி மட்டும் "போய்த்தான் பாக்கலாமே"ன்னு சொல்லாமல் இருந்திருந்தா இன்று நாங்கள் பல விசயங்களை அடைந்திருக்கவே முடியாது.

புதுதில்லியில் இருக்கும் போது ஒரு நாள் நான் திடீரென்று "வேலையை விட்டு விட்டு பிசினஸ் செய்யப்போறே"ன்னு சொன்ன போது அவள் மறுப்பேதும் சொல்லவில்லை. சில
மாதங்களுக்குப் பிறகு "Business is not my cup of tea, I am getting back to work"ன்னு சொன்னபோதும் ஒன்றும் சொல்லலை. வேறொருவராய் இருந்தால் "நான் அன்னிக்கே சொன்னேனே கேட்டானா பாவி மனுஷன் "- பாட்டு ஆரம்பமாகியிருக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள சில ஏழைக்குழந்தைகளின் படிப்புக்கு பண உதவி செய்யவேண்டும் என்பது என் கனவு. அது பற்றி சொன்ன போது "எவ்வளவு பணம் குடுக்கப் போற?...எப்படி..?"
என்றெல்லாம் மருந்துக்கு கூட கேட்கவில்லை. இப்போதும் நான் என் குடும்பத்தாருக்கு பணமோ / கிப்ஃடோ குடுக்கும் போது "இவ்வளவுதான் குடுக்கப் போறியா, அவங்களுக்கு இது
போதுமான்னு கேட்டியா - வேணும்னா இன்னும் கொஞ்சம் கொடுக்கலாமே" என்பதைத் தவிர வேறு தர்க்கம் ஏதுவும் அவர் செய்து கேட்டறியேன். எத்தனை பேர் மாமியாருக்கும்
நாத்தனாருக்கும் கணவன் பணம் கொடுக்கும் போது இப்படி சொல்வார்கள் என்று நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். நண்பர்களுக்கு பல தடவை பண உதவி செய்து சில சமயம் நஷ்டப்
பட்ட போதும் கூட இன்றளவில் நான் செய்யும் உதவிகளை அவர் ஆட்சேபித்து ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை.

இதற்கெல்லாம் மேல் அவருக்கு அமெரிக்காவிற்கு ட்ரான்ஸ்பர் ஆகிய போது, நானும் எல்2 விசாவில் அவர் கூடவே வந்து இங்கு வேலை தேடிக்கொள்ளலாம் என்று முடிவு செய்தோம்.
வந்த அடுத்த மாதமே எனக்கு வேலை கிட்டியதென்றாலும், அந்த முப்பது நாளும் நான் சம்பாதிக்கவில்லையே என்று கவலைப் பட்டுவிடக்கூடாதே என்று அவர் கையில் இருந்த பணம் எல்லாவற்றையும் என் கையில் குடுத்து, வங்கிக் கணக்கின் ஆன்லைன் ஆப்ரேஷனையும் என்வசம் ஒப்படைத்து, அவர் செலவுக்குக் கூட என்னிடம் பணம் வாங்கிச்சென்ற அவரின் அன்பையும், பாசத்தையும் நினைத்து நெகிழ்ச்சியோடு ஒரு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

என்னுலகத்தில் அவள் ஒரு முக்கிய அங்கம், அவளுக்கு உலகமே நான் தான். இப்பேற்பட்ட பெருமையை அளித்த அவளுக்கு இந்நன்னாளில் என் வாழ்த்துகளும் நன்றியும்.

இந்த நட்சத்திர வாரம் என் மணநாளில் முடியுமாறு வாய்ப்பை வழங்கிய தமிழ் மண நிர்வாகிகளுக்கும், ஊக்கமளித்த உங்களுக்கும் நன்றி..

அடுத்து வரும் தமிழ்மண நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்களைச் சொல்லி உங்களிடமிருந்து "என்றும் அன்புடன்" விடை பெறுகிறேன் நண்பர்களே...

மழை - சிறுகதை

நாலு நாளா பெஞ்ச மழையில சென்னை ஒரே வெள்ளக் காடா இருந்தது. எல்லா பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்தது.

"அதெல்லாம் இல்ல மல்லிகா! நம்ம ரோட்டில அவ்வளவா தண்ணி நிக்கல.. வீட்ல எல்லாம் போட்டது போட்ட படி கிடக்கு. இன்னிக்கு லீவ் போடாம வந்துட்டு போயிடு!"

".."

"என்ன சின்னக் குழந்தையா? பெரியவன் சரவணனுக்கு லீவ் தானே! அவன ரெண்டு மணிநேரம் பாத்துக்கச் சொல்லிட்டு வந்துரு மல்லிகா. அத்தனை பாத்திரம் கிடக்கு! துணி தோய்க்கணும், வெள்ளிக்கிழமை வீட்டையும் கண்டிப்பா தொடைக்கணும். என்னை கூட லீவு போடாம ஆபிஸ் வரச் சொல்லிட்டாங்க. சீக்கிரமா வந்துரு மல்லிகா.. "

".."

"இதுக்குத்தான் செல்போன் வச்சிருக்குற வேலைக்காரியெல்லாம் வேணாம்னு சொன்னேன், நீங்கதான் ஹாஸ்பிட்டல்ல வேலை செய்யுற ப்யூனின் சம்சாரம்னு சொல்லி வேலைக்கு வச்சீங்க!!" என்று புலம்பிய படியே செல்போனை கீழே வைத்தாள் அனுசுயா. டாக்டர் கேசவன் பிறந்ததே ஹிந்து பேப்பர் படிக்கத்தான் என்பது போல அதில் மூழ்கி இருந்தார்.

"ஏதாவது காதில வாங்கினாத்தானே" என்றவாறே புலம்பலைத் தொடர்ந்தாள்.. " குடிசை ஒழுகுது, குழந்தைக்கு உடம்பு சரியில்ல,பெரிய பையனுக்கு லீவுன்னு மட்டம் போடறதுக்கு எக்கச்சக்க சாக்கு!! கண்டிப்பா சொல்லிட்டேன் வேலைக்கு வந்தே ஆகணும்னு!" என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு கிச்சனுக்குள் நுழைந்தாள். கம்புயூட்டர் கேம்ஸில் ஆழ்ந்திருந்த வைகுந்த் ஆச்சர்யமாய் அம்மாவைப் பார்த்துக் கேட்டான்.

"இப்போ தானேம்மா ஆபிஸுக்கு போன் பண்ணி லீவ் சொன்னே அதுக்குள்ள மல்லிகா ஆண்டிகிட்ட வேலைக்குப் போகணும்னு சொல்றியே என்ன ஆச்சுமா?"

"அதெல்லாம் உனக்குப் புரியாது வைகுந்த்! வேலைக்காரிக்கெல்லாம் ரொம்ப இடம் கொடுக்கக் கூடாது, இரு உனக்கு காம்ப்ளான் கொண்டு வர்றேன், குடிச்சிட்டு கம்புயூட்டர் கேம்ஸ் விளையாடு" என்று சொல்லிக்கொண்டே ஹாலுக்கு வந்தாள். அங்க பாத்தா வைகுந்த் கேமை மூடி வச்சிட்டு ரெயின் கோட்டை மாட்டிக் கொண்டு இருந்தான்.

"எங்கடா கிளம்புற? வெளியில தண்ணி வெள்ளமா ஓடுது! அதுல போனா ஜுரம் வந்திடும் ஒழுங்கா வீட்டுக்குள்ளேயே விளையாடு."

"இதே மழையும் தண்ணியும் மல்லிகா ஆண்டிக்கும் அவங்க பசங்களுக்கும் உண்டு தானேம்மா? நீ வேற சின்ன பாப்பாவையும் சரவணனையும் வீட்ல தனியா விட்டுட்டு ஆண்டியை வேலைக்கு வரச் சொல்லிட்ட! சரவணனுக்கும் என் வயசு தானேம்மா ஆகுது? அவன் மட்டும் எப்படிம்மா தனியா சின்ன பாப்பாவைப் பாத்துப்பான், நான் போயி ஆண்டிய இங்க அனுப்பறேன். அவங்க வேலை செஞ்சு முடிச்சு வர்ற வரைக்கும் நானும் சரவணனும் சின்ன பாப்பாவோட விளையாடிக்கிட்டு இருக்கோம், போற வழியில் பாப்பாவுக்கு ஒரு சிரப் பாட்டிலும் வாங்கிட்டு போறேன். நீதானம்மா பொய் சொன்னா உம்மாச்சி கண்ணைக் குத்திடும்னு சொல்லித் தந்திருக்க. இப்ப நீயே பொய் சொல்லியிருக்க, நான் போயி சரவணனுக்கு ஹெல்ப் பண்ணா சாமி உன் கண்ணை குத்தாதில்ல..?"

ஒரு கணத்தில் பத்தே வயதான வைகுந்த் அனுசுயாவுக்கு ஞானியாகத் தெரிந்தான். அடுத்த நிமிடம் போனில் பேசிக் கொண்டிருந்தாள் அனுசுயா.

"ஆமாம் மல்லிகா நாந்தான் பேசறேன், இல்ல இல்ல ஆபிஸுக்கு மறுபடியும் போன் பண்ணி லீவ் சொல்லிட்டேன், நீ ஏதாவது
வண்டி பிடிச்சு சரவணனையும், சின்ன பாப்பாவையும் கூட்டிக்கிட்டு இங்க வந்திடு, ஐயா டாக்டர்தானே பாப்பாவை அவரிடம் இங்கேயே காட்டி மருந்து கொடுத்திடலாம்! நீ வேலையெல்லாம் முடிக்கறதுக்குள்ள நான் சமையலை முடிச்சிடறேன். நீங்க இங்கேயே சாப்பிட்டுக்கலாம், நீ பாவம் ஒழுகுற குடிசையில என்ன சமைக்க முடியும்? வைகுந்தும்,சரவணனும் சாயங்காலம்
வரைக்கும் விளையாடிக்கிட்டு இருக்கட்டும், அப்புறமா நிங்க வீட்டுக்குப் போய்க்கலாம்.."

மறுமுனையில் மாற்றத்துக்கு காரணம் புரியாமல் முழித்துக்கொண்டு இருந்தாள் மல்லிகா.


டிஸ்கி : மொதோ முறையா கதை மாதிரி ஒண்ணு எழுத முயன்றிருக்கிறேன்.கேவலமா இருக்கா ரொம்பக் கேவலமா இருக்கான்னு சொன்னீங்கன்னா அடுத்த முறை ரிஸ்க் எடுக்க மாட்டேன்.

Friday, December 10, 2010

கம்பெனியை காதலிக்கணுமா? ஒரு விவாதம்

பின்னூட்டப் புயல் ராம்ஜி யாஹூ அமெரிக்கவில் பிடிக்காத பத்து இடுகையில் ஒரு கருத்தைச் சொன்னார். இதோ அந்தப் பின்னூட்டம்

//எவ்வளவுதான் சம்பளம், சலுகைகள் கொடுத்தாலும் ஊழியர்களுக்கு தங்கள் நிறுவனம் மீது ஒரு பந்தம், பாசம் இருக்காது.நம் ஊரில் மாதம் 5000 சம்பளம் வாங்கும் ஊழியர் கூட முதலில் தன நிறுவன நலனை பார்ப்பார் பின்பே தன சுய நலம் கருதுவார். ஆனால் அமெரிக்காவில் நேர் எதிர் போக்கு//

இதுக்கு அப்பதிவிலேயே பதில் சொல்ல ஆரம்பிச்சேன். அப்புறம் இதுபத்தி கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்பதாலும் இது குறித்தான பிறரின் கருத்துகக்ளையும்
அறிய வேண்டும் என்பதாலும் ஒரு தனி இடுகையா எழுதறேன். பல நேரங்களில் இது பத்தி விவாதிக்க வேணும்னு நினைப்பேன்.இப்பத்தான் நேரம் கூடி வந்திருக்கு.

வேலை செய்யும் நிறுவனத்தின் மீது பந்தம் பாசம் எல்லாம் தேவையா? இது நீயா நானாவில் விவாதிக்க நல்ல தலைப்பு. சின்ன லெவலில் என் தளத்தில் விவாதிக்கலாம்.

நான் பார்த்த வரையில் வேலை செய்யும் நிறுவனத்தின் மீது அளவு கடந்த பாசம் வைத்து அதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். கம்பெனிக்காக என் உயிரையே கொடுப்பேன் என்றெல்லாம் சொல்வார்கள். பலவருஷம் வேலை செய்வதையும் பிணைப்பையும் இணைத்துப் பேசுவார்கள். என்னைப் பொருத்த மட்டில் இதெல்லாம் தேவையில்லை.

என்னோட கருத்துக்களை முன் வைக்கிறேன், உங்க கருத்துக்களை எதிர் பார்க்கிறேன். முக்கியமா, இனியவன் உலக்ஸ் அவர்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன். நான் அறிந்த அளவில் அவர் வேலை செய்யும் கம்பெனியோடு ரொம்ப அட்டாச்டு. வேற ரொம்ப நல்ல Opportunity வந்த போதும் நிறுவனத்தை விட்டு விலகாதவர், திடீரென்று போன் பண்ணி மலேசியாவிலிருந்து இந்தியா வாங்கன்னு டீ குடிக்க கூப்பிடறா மாதிரி கூப்பிட்டாலும் வீட்டுக்கே போகாமல் நேரா சென்னை வரும் அளவுக்கு கம்பெனியை காதலிப்பவர். அவர் கருத்தை அறிய ஆவல்.

My Views about Job and its importance in your life:



வேலை செய்யும் கம்பெனிக்கு உண்மையா, நேர்மையா இருக்கணும் அதுக்காக கம்பெனியை காதலிப்பதோ அல்லது குடும்பத்துக்கு முன்னர் வேலையை வைப்பது சரியல்ல. நெறய இந்தியர்கள் குடும்பத்தைக் கவனிக்க நேரமில்லாமல் வேலையோடு ஒன்றியிருப்பதைக் காண்கிறேன். ஒரு மேனேஜர் என்ற வகையிலும் நான் எதிர்பார்த்தது எதிர்பார்ப்பது திறமையான, நேர்மையான,கம்பெனியின் பணத்தைக் களவாடாத, கம்பெனிக்கு வர வேண்டிய லாபத்தை தனதாக்கிக் கொள்ளாத Employee தானே தவிர கம்பெனியைக் காதலிப்பவரை அல்ல. என் டீமில் வேலை செய்த நண்பர்களுக்கு வேறு நல்ல வாய்ப்புகள் கிடைத்த போது சந்தோஷமாக அனுப்பி வைத்தேன். அவங்க இன்னிக்கும் சென்னையிலிருந்தும் மும்பையிலிருந்தும் துபாயிலிருந்தும் Career Guidance கேட்டுத் தொடர்பு கொள்கிறார்கள். என் டீமில் தில்லியில் வேலை செய்த ஒருவருக்கு விப்ரோ மும்பையில் வேலை கிடைத்த போது சேருமாறு அறிவுருத்தி அனுப்பிவைத்தேன். நான் அவரின் Reporting Manager ஆக இருந்தாலும் நான் Rational ஆக
முடிவெடுப்பேன் என்ற நம்பிக்கையில் என்னிடம் அறிவுரை கேட்டார். அதே நண்பர் பின்னர் ஒருநாள் விப்ரோவிலிருந்து வேறொரு கம்பெனிக்கு மாறட்டுமா என்று கேட்ட போது
வேண்டாமெனத் தடுத்தேன். ரெண்டு நிகழ்விலும் SWOT Analysis தான் முடிவு செய்ததே தவிர கம்பெனி மீதான காதல் அல்ல.


An Organization is any day bigger than an Individual.If Dhirubai Ambani is replaceable in Reliance and if Narayanamurthy is replaceable in Infosys, No one is indispensible in any organization. But Anil and Mukesh can never replace their father.

என்னைப் பொருத்தவரையில் ஒருவர் நல்லா வேலை செய்யும் வரையில் கம்பெனி அவரை வைத்துக் கொள்ளும். வேலை செய்வதில் சுணக்கம் ஏற்பட்டாலோ, கம்பெனியின் நிதி
நிலைமை சரியா இல்லாமல் போனாலோ அவ்வளவு ஏன் கம்பெனியின் நிர்வாகம் மாறினாலும் அவரை வேலையை விட்டு அனுப்ப ஒரு கணம் கூட தயங்காது. அப்படி இருக்கையில்
Employee மட்டும் ஏன் நிறுவனத்தின் மீது காதல் கொள்ள வேண்டும்?

"Love your profession but never fall in love with your company" இது நாராயண மூர்த்தி அவர்கள் சொன்னதாக வெளிவந்தது. அவர் என்ன அர்த்ததில் இதைச் சொன்னாரெனத் தெரியாது. என்னளவில் இதுக்கு அர்த்தம் - Job Satisfaction மற்றும் சம்பளம் ரெண்டும் சரி விகிததில் இருக்கும் வரை வேலை செய். இது மாறும் போது வேறு வேலை தேடு. சில வேலைகளில் சந்தோஷம் அதிகமாகவும் சம்பளம் குறைவாகவும் சில வேலைகளில் இது மாறியும் இருக்கும், Trade-off நீங்கதான் முடிவு செய்யணும். உங்கள் மீதும் செய்யும் வேலையின் மீதும் (Profession) காதல் கொள்ளுங்கள். நிறுவனத்தின் மீதல்ல. எண்ணங்களும் கொள்கைகளும் கோட்பாடுகளும் வேவ்வேறாக இருந்தால் (Yours and company's) வேறு வேலை தேடுவது நலம்.


“It is not the employer who pays the wages. Employers only handle the money. It is the customer who pays the wages.”
இது ஹென்றி ஃபோர்ட் சொன்னது. நெறய பேர் முதலாளி சம்பளம் கொடுப்பதாக நினைக்கிறார்கள். கஸ்டமர்கள் வாங்குவது குறைந்து பண வரவு குறைந்தால் முதலாளி
சொந்தப் பணத்தில் இருந்து எடுத்துக் கொடுக்க மாட்டர், ஆட்குறைப்புதான் செய்வார். நிலைமை இப்படி இருக்கையில் நாம் மட்டும் ஏன் வேலையைக் காதலித்து நல்ல வாய்ப்புகளை விட வேண்டும்?

அதே போல பணத்தின் பின்னால் ஓவரா அலைந்து வாழ்க்கையை அனுபவிக்காமல் விடுதலும் தவறே. There is no point in being the richest man in the grave yard, you cannot do any business from there - இது புரிஞ்சா போதும். Work - Family Balance தன்னால வரும்.

அம்புட்டுதேன் நம்ம கருத்து, ஒரு நல்ல விவாதத்தைத் துவக்கி வைத்த நண்பர் ராம்ஜி யாஹூ வுக்கு நன்றி.

Thursday, December 9, 2010

கனவு தேசத்தில் கணினி வாழ்க்கை : பகுதி 8

முந்தைய பகுதிகள்

ஒரு நல்ல சேதி மற்றும் ஒரு எச்சரிக்கை

தமிழ்மண நட்சத்திர வாரத்தில் நீங்க எல்லாரும் வழங்கி வரும் ஆதரவுக்கு நன்றி.


கனவு தேசம் தொடரின் இப்பகுதியில் தற்போதைய நிலையில் இருக்கு ஒரு நல்ல விசயத்தையும் ஒரு பிரச்சனைக்குறிய விசயத்தையும் பாக்கலாம்

மொதல்ல நல்ல விசயம். அமெரிக்காவில் IT Contracting Job Market இப்போ ரொம்ப நல்லா இருக்கு. கடந்த அஞ்சு ஆறு மாசமாகவே நெறய காண்ட்ராக்டிங் வேலை வாய்ப்புகள் அதிகமாகிக்கிட்டு இருந்து வருது. Recession க்கு அப்புறம் பொதுவா கம்பெனிகள் Full Time ஆட்களை வேலைக்கு எடுப்பதை விட Temporary Staffing
என்று சொல்லப்படும் Contracting Resources களை வேலைக்கு அமர்த்துவது வழக்கமே.

2010ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல், மே, ஜூன்) முன்னேற்றத்தின் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன. மூன்றாம் காலாண்டில் (ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்)
அதிக அளவில் வேலை வாய்ப்புகள் வந்துள்ளன. 2009ம் மூன்றாம் காலாண்டை விட 2010ன் மூன்றாம் காலாண்டில் 15 சதவீதம் அதிக வேலை வாய்ப்புகள் வந்துள்ளன. அதிக அளவில் டெக்னாலஜி கம்பெனிகள் அமைந்துள்ள கலிபோர்னியாவில் அதிக அளவு Recruitment நடந்திருக்கு.

இடங்களைப் பொருத்த வரையில் இதில் டாப் டென் இடங்களைப் பெற்ற இடங்கள் - கலிஃபோரினியா, நியூ ஜெர்ஸி, நியூ யார்க், டெக்ஸாஸ், இல்லினாய்ஸ், பென்சில்வேனியா,
வர்ஜினியா, ஜார்ஜியா, Massachusetts (அதாங்க எங்க ஊரு -இத தமிழ்ல எழுதுறது ரொம்ம்ப கஷ்டம்), மற்றும் ஃப்ளோரிடா.


டெக்னாலஜியைப் பொருத்த முறை, ஜாவா Requirements அதிக அளவில் வந்திருக்கு - 14 சதவீதம், அடுத்த ஹாட் டெக்னாலஜி Dotnet - 10%. SAP க்கும் System Admin க்கும் இதே அளவில் (10%) வேலை வாய்ப்புகள் வந்திருக்கு. QA - 8%, Data Warehousing / ETL - 7%, Oracle Apps- 5%, ப்ராஜக்ட் மேனேஜர் - 5%, Reporting Tools - 5%, Database Developers - 5%, Business Analysts - 4%, DBA = 4%, Web / Internet - 3%, People Soft - 3%, Siebel - 2%, Mainframe - 1%, Middleware - 1%, C and C++ - 1%, Mobile Applications - 1% மற்றும் Unix - 1% என்கிற விகிதங்களில் Requirement வந்துள்ளன.

ஒரு விசயம் ரொம்பத் தெளிவாத் தெரியுது. ஜாவா, Dotnet, Oracle போன்ற டெவலப்மென்ட் டெக்னாலஜிக்கும் சிஸ்டம் அட்மின்களுக்கும் இப்போதைய மார்க்கெட் நிலவரத்தில் அதிக டிமாண்ட் இருக்கு. இந்த டெக்னாலஜியில இருக்கும் IT மக்கள், ப்ராஜக்ட் மாற்ற நினைத்திருந்தால் அதுக்கு இது உகந்த நேரம்.

தற்போதைய நிலை ப்ராஜக்ட் மாத்துறதுக்குக்கு உகந்ததாக இருந்தாலும் H1B ல இருக்கும் மக்கள் இந்தியா செல்வதற்கு இது உகந்த நேரமல்ல.

H1B visa stamping செய்வதில் தற்போது சிக்கல்கள் இருப்பதாகத் தெரியவருகிறது. இந்தியாவில் இருக்கும் அனைத்து எம்பஸிகளிலும் கோவில் பிரசாதம் போல H1B stamping செய்ய செல்லும் அனைவருக்கும் Blue Paper என்றழைக்கப்படும் Form 221G (Request for More documents) வழங்கப் படுகிறது. பல பேருக்கு Visa Rejection கூட நடக்கிறது. ஸ்டாம்பிங் தேவைப்படுவோர் தற்போது இந்தியா செல்வதைத் தவிர்ப்பது நலம். ஸ்டாம்பிங் இருந்தாலும் Port of Entry யிலும் பல கேள்விகள் கேட்டு
Deport செய்வதும் நடந்து வருகிறது. ஏதொரு முக்கிய காரணமும் இல்லாமல் இந்திய விடுமுறை ப்ளான் பண்ணியிருக்கும் நண்பர்கள் பயணத்தைக் கொஞ்சம் ஒத்திப் போடுங்க.
மேலதிக விவரம் தேவைன்னா தனி மடல் அனுப்புங்க, கூப்பிடறேன். நிலைமை சகஜமானதும் அப்டேட் பண்றேன்.

தத்துபித்துவங்கள் இருபது

நேத்து பிடிக்காத பத்து அதுக்கு முன்னாடி பிடிச்ச பத்து, இன்னிக்கு தத்து பித்துவங்கள் இருபது. ரெண்டு நாளா கொஞ்சம் சீரியஸா டிஸ்கஷன் போச்சு, அடுத்ததும் அமெரிக்க
காண்ட்ராக்ட் வேலை நிலவரம் பத்தி சீரியஸா வருது. எனவே நடுவுல ஒரு கெக்கே பிக்கே காமடி.பொருத்தருள்க.

1. நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க முடியாது.

2. ஸ்கூல் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... காலேஜ் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... ஆனால் ப்ளட் டெஸ்ட்லே பிட் அடிக்க முடியாது.

3. ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு

4. என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும்.

5. காசு இருந்தா கால் டாக்சி!! காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!!

6. பல்லு வலின்னா பல்லைப் புடுங்கலாம். ஆனா கண்ணு வலின்னா கண்ணைப் புடுங்க முடியுமா?

7. இட்லி பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம். ஆனா மூக்குப் பொடியைத் தொட்டு மூக்கை சாப்பிட முடியாது.

8. பாண்ட் போட்டு முட்டிப்போட முடியும். ஆனா முட்டிப் போட்டு பாண்ட் போட முடியுமா?

9. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

10. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.

11. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது

12. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.

13. என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.

14. நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.

15. க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?

16. ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.

17. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.

18. செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.

19. ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது.

20. என்னதான் உயர பறந்தாலும் கொசுவை பறவை லிஸ்டில் சேர்க்கமுடியாது

தத்துபித்துவங்கள் கண்டெடுத்தது இணையத்தில், மூழ்கி முத்தெடுத்தவர் : “என்றும் அன்புடன்” பாஸ்டன் ஸ்ரீராம்

Wednesday, December 8, 2010

கனவு தேசத்தில் கணினி வாழ்க்கை பகுதி 7

பத்து பத்து - நேற்றைய இடுகையின் தொடர்ச்சி பிடிக்காத பத்து


1. அம்மாவும் அப்பாவும் அக்காளும் அண்ணனுமே Distant Relatives ஆகிப் போன சோகம். என்னதான் 2 செண்ட்ல இந்தியாவுக்கு பேச முடியுமென்றாலும், வார இறுதியில் வெப்கேம் துணையோடு உரையாடினாலும் அருகாமைன்னு ஒண்ணு இருக்கே அது கிடைக்காது.

2. வாழ்க்கை முறை : அமெரிக்கர்களின் வாழ்க்கை முறை எனக்குப் பிடிக்காத ஒன்று. “கட்டற்ற சுதந்திரம்” இங்குள்ளவர்களைக் கெடுத்து வச்சிருக்கு. பதின்ம வயதிலேயே
எல்லாப் பழக்கங்களும் வந்திடுது. அளவுக்கு மீறிய Individuality இங்கு அதிக அளவில் விவாகரத்துகள் நடக்கக் காரணம். விளைவு நெறய் குழந்தைகளுக்கு பெற்றோர் இருவரோடும் வாழக் கொடுப்பினை இல்லை. பல பேருக்குத் தனிமையே துணை. வார இறுதியில் பப்புக்கும் பார்ட்டிகளுக்கும் துணை தேடி நெடும் பயணம்.

3. சேமிப்பு இல்லாமை: பணத்தைப் பொருத்த வரையில் நான் ஒரு Conservative. Saving Economy இல் அதிலும் ஒரு சாதாரண Indian Lower Middle Class சூழ்நிலையில்
வளர்ந்த எனக்கு அமெரிக்கச் சூழல் பெரும் வியப்பே. பெரும்பாலான அமெரிக்கர்கள் நாளை என்ற ஒன்றைப் பற்றியே கவலைப் படுவதாகத் தெரியவில்லை. அமெரிக்கர்களின் Combined Personal Debt 2 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகம் (சராசரியாக ஒரு குடும்பத்தின் கடன் 1.2 லட்சம் டாலர்கள்). இங்கிலாந்தின் மொத்த GDP யே அவ்வளவுதான். அறுபதிகளில் அமெரிக்கர்களின் சேமிப்பு சம்பளத்தில் 11 சதவிகிதம், அதுவே தொண்ணூறுகளில் 5 சதவிகிதம். கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக 2003ல் அது 2.3 %. பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் மக்கள் கொஞ்சம் விழித்துக் கொண்டு 5 முதல் 7 % வரை சேமிப்பதாக ஒரு தகவல் கூறுகிறது.

இந்த படம் பல நூறு கதைகள் சொல்லும்



4. உப்பு சப்பில்லாத உணவு : இந்தியாவிலிருந்து வந்த புதிதில் எல்லாரும் கடினமாக உண்ரும் விசயம் இது. நல்ல காரசாரமாக சாப்பிட்டுப் பழகிய நமக்கு இங்கு கிடைக்கும் உணவு வாயில் வைக்க வழங்காது. போகப் போக பழகினாலும் நாக்கு இந்திய உணவங்களைத் தேடி அலைவதைத் தவிர்க்க இயலாது.

5. Too many choices : நான் பிடிச்ச பத்தில் சொல்லியிருந்த ஒண்ணு - ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் Customer is King feeling. அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சுன்னு சொல்றா மாதிரி அமெரிக்காவில இருக்கும் அளவுக்கு அதிகமான சாய்ஸ் நம்மளை ஒரு பொருளை வாங்குவதற்கு பல மணி நேரம் செலவிட வைக்கும்.
Big Ticket Purchase எதுவானாலும் முக்கியமாக எலக்ட்ரானிக் பொருட்கள் (உதாரணமாக LCD TV or camera or Laptop) வாங்க முடிவெடுத்தால், மொதோ பிரச்சனை என்ன பிராண்டு / Specification வாங்குவது? ஒரு பொருளுக்கு நூத்துக் கணக்கான சாய்ஸ். கம்பெனியோட சைட்ல விவரங்களைப் பாக்கணும், அப்புறம் Cnet ல Expert review பாக்கணும், Marketplace தளங்களில் Compare பண்ணனும், Yelp, Amazon மாதிரி தளங்களில் User Review படிக்கணும். ஒரு வழியா பல மணி நேரங்கள் செலவழிச்சு ஒரு குறிப்பிட்ட மாடலை செலக்ட் பண்ணி முடிச்சு அப்பாடான்னு மூச்சு விட்டா அடுத்த யுத்தம் ஆரம்பிக்கும். அப்பொருளுக்கு நூறு சைட்ல நூறு விலை போட்டிருப்ப்பான்.
நமக்கோ நாம வாங்கின விலையை விட யாராவது குறைவா வாங்கிட்டாங்கன்னு தெரிஞ்சாத் தலையே வெடிச்சிடும். நாந்தான் கம்மி விலையில வாங்கியிருக்கேன்னு காட்டுவதற்காக
பல மணி நேரம் ஆன்லைன்ல செலவிடுவோம். Amazon பாத்தியா Ebay பாத்தியான்னு வேற எக்ஸ்பர்ட் ஒப்பீனியன் வேற பல திசைகள்லேருந்து வரும். இதுக்கெல்லாம் மீறி ஒரு விசயம் இருக்கு. நவம்பர் மாசத்துக்கு இன்னும் எவ்ளோ நாள் இருக்குன்னு பாக்கணும், ஏன்னா Black Friday க்கு நாம் நெனச்ச பொருள் டீலில் வருமான்னு பாக்கணும். இதுவாவது பரவாயில்ல Big Ticket Purchase ல 100 -200 $ மிச்சமாகும். Macys போன்ற துணிக்கடைகளுக்கு போகும் போது நடக்கும் Coupon கூத்து இருக்கே சொல்லி மாளாது... Vivek & Co வுக்கோ Vasanth & Co வுக்கோ போனோமா நாலு TV பாத்தோமா ஒண்ணை பேரம் பேசி வாங்கி வீட்ல டெலிவர் பண்ணிடுங்கன்னு சொல்லிட்டு கூல வர்ற சுகம் இருக்கே ... ஹூம்... அது ஒரு கனாக் காலம்..


6. போர் தொடுப்பது / மூக்கை நுழைப்பது : வேறெந்த நாட்டினுடைய ஒரு அடி நிலத்தைக் கூட இதுவரை அபகரிக்காத (காஷ்மீரை குள்ளநரித்தனமாக நம்மோடு சேர்த்திருந்தாலும்)
நாட்டைச் சேர்ந்த எனக்கு அமெரிக்காவின் தேவையற்ற போர்கள் வெறுப்படைய வைக்கின்றன. நாடு பிடிக்கும் எண்ணம், உலக எண்ணெய் வளத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் எண்ணம் என பல காரணங்கள் இருக்கும் இவர்களுக்கு உலக அமைதிக்கு ஒரு காரணம் கூட தோன்றாதது வியப்பே.

7. Expensive Medicare : இந்த ஊரில் மருத்துவமனைகளும் மெடிக்கல் இன்சூரன்ஸ் கம்பெனிகளும் சேர்ந்து அடிக்கும் கூட்டுக் கொள்ளை ஒரு Daylight Robbery.
ஊருக்கு ஊர் இலவசமா நூலகம் கட்டி அதில் இலவசமா சினிமா பட டிவிடி கொடுக்கும் அரசாங்கம் இலவச பொது மருத்துவமனை கட்டாது. இவனுங்க வாங்கற வருமான வரிக்கு
இலவசமாகவே மருத்துவ சேவை பண்ணலாம். உலகிலேயே அதிகமா Medicare க்கு செலவு செய்வது அமெரிக்காதான். GDPல 15 சதவிகிதம் இதுக்கு போகுது. ஆஸ்திரேலியா 9%, மிகச் சிற்ந்த சேவை உள்ள ஜப்பான் GDP ல 8% Medicare க்கு செலவு பண்ணுது. DHS மூலம் சிறப்பான சேவை வழங்கும் இங்கிலாந்தின் செலவு 7.5%. தரமான இலவச மருத்துவ வசதி கொண்ட கனடா கூட 10% க்கு மேல செலவு பண்ணுவது கிடையாது. அமெரிக்காவில் இத்தனை பணம் என்னாகுது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். இதுக்கும் மீறி
ஆஸ்திரேலியாவில் annual cost of health care per capita is $2,886. In Canada it is $2,998 in UK it is $2317 the same in USA is
$5711,
இதுக்கும் மேல மருத்துவமனைக்குப் போகும் போதும் பணம் கேட்டால் கோவம் வருமா வராதா?

8. ஆட்டோ : அண்ணன் தம்பியை மிஸ் பண்றேனோ இல்லயோ நான் ஆட்டோவை அமெரிக்காவில் ரொம்பவே மிஸ் பண்றேன். எவ்வளவுதான் ஏமாத்தறாங்கன்னு பொலம்பினாலும் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் கையைக் காட்டி நிறுத்தி ஆட்டோவில் ஏறிப் போவதில் இருக்கு சவுகரியம் அமெரிக்காவில் கிடையாது. Public Transport வசதி ரொம்ப கம்மி, டாக்ஸி வாடகை அதிகம், அதையும் போன் பண்ணிக் கூப்பிடனும். நெனச்ச நேரத்துக்கு நெனச்ச இடத்தில் கிடைக்கும், தெருக்குத்தெரு ஆட்டோ ஸ்டாண்ட் - இந்த வசதியை மிஸ் பண்ணும் போதுதான் இதன் அருமை தெரியும்.

9. குடியுரிமைச் சட்டம் : Modern America முழுக்க முழுக்க வந்தேரிகளால் நிரம்பியது. அப்படிப்பட்ட ஒரு நாட்டில் Permanent Residence Process எவ்வளவு இலகுவாக இருக்க வேண்டும்? இந்நாட்டுக்கு வேலை செய்ய வந்து PR விண்ணப்பம் செய்வதில் முக்கியமானவர்கள் இந்தியர்கள். அவங்களுக்கு PR கிடைக்க பல வருடங்கள் ஆகுது.
வேலை உரிமை விசா (work visa) வழங்க கெடுபிடி செய்வது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு வேலை செய்யத் தெரிவாகி வந்து வேலை செய்பவருக்கு PR கொடுப்பதில் இருக்கும் தாமதம் எரிச்சல் தருது.

10. பிளாஸ்டிக் உபயோகம் : சுற்றுச் சூழலை பாதுகாக்க உலக நாடுகள் ஒத்துழைக்கணும், ஓசோன் ஓட்டையை அடைக்க உலக நாடுகள் எல்லாம் சேந்து ரப்பர் உருக்கலாமுன்னு
சொல்லிக்கிட்டே அமெரிக்கா உபயோகிப்பது வருசத்துக்கு 100 பில்லியன் பிளாஸ்டிக் பைகள், இதன் மதிப்பு 4 மில்லியன் டாலர்கள். இதுபத்தி இங்கு யாருமே கவலைப் படுவதாகத்
தெரியவில்லை. ஏதோ என்னால முடிஞ்சது ஊரிலிருந்து 4-5 துணிப்பைகள் எடுத்து வந்து யார் என்ன நெனச்சாலும் கவலை இல்லைன்னு துணிப்பைகளில் காய்கறி, பழங்கள்
வாங்கி வருவருகிறேன்.

நேத்தும் இன்னிக்கும் நான் சொன்னது நான் கண்டவரையில் அமெரிக்காவில் எனக்குப் பிடித்த மற்றும் பிடிக்காத பத்து விசயங்கள். உங்களுக்கு பிடிச்ச / பிடிக்காத விசயங்களைப்
பின்னூட்டத்தில சொல்லுங்களேன்.

Tuesday, December 7, 2010

கனவு தேசத்தில் கணினி வாழ்க்கை பகுதி 6

பத்து பத்து
முந்தைய பகுதிகள்

இந்தத் தொடரில் இதுவரை H1B விசா மற்றும் இடங்கள் / விலைவாசி பத்தி மட்டுமே எழுதியிருக்கிறேன். இந்தப் பதிவில் கொஞ்சம் வித்தியாசமா எனக்கு அமெரிக்காவில் பிடிச்ச /
பிடிக்காத பத்து விசயங்களைப் பத்திச் சொல்றேன். நீங்களும் உங்களுக்கு பிடிச்ச / பிடிக்காத விசயங்களைப் பத்தி பின்னூட்டத்தில சொல்லுங்களேன். நான் இங்கு சொல்லியிருப்பது
அனைத்தும் நான் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் அனுபவித்து உணர்ந்தவை - இவை என்னோட பர்சனல் ஒப்பீனியன் மட்டுமே.


பிடித்த பத்து

1. Very Systematic : இந்த நாட்டில் இருக்கும் ஒழுங்கு முறை எனக்கு ரொம்பப் பிடிக்கும். போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதாகட்டும், பாதசாரிகளுக்கு வழி விடுவதாகட்டும் எங்கு சென்றாலும் வரிசையை கடை பிடிப்பதாகட்டும், அமெரிக்காவில் இருக்கும் ஒழுங்கு அனைவரும் பின்பற்ற வேண்டியது

2. Roads : நாட்டின் உள்கட்டமைப்பின் உயிர்நாடி அமெரிக்காவின் சாலைகள். ரொம்ப க்ளியரா Town Roads / Highways என்று பிரித்து சாலைகளை அமைத்து இருக்காங்க.
ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்துக்கு செல்ல முதலில் Town Road இல் பயணித்து Highways இல் இணைந்து விட்டால் போக வேண்டிய Town வரை ஹைவேஸில் சிக்னல், பாதசாரிகள், எதிர் வரும் வாகனங்கள்னு எந்த தொந்தரவும் இல்லாம பயணிக்கலாம். சாலைகளின் தரமும் மிகவும் உயர்வு.

3. Ecommerce / Online Shopping : எனக்கு பர்சனலா ரொம்பப் பிடிச்ச இன்னொரு விசயம். ஒரு பொருளை வாங்க பல கடைகள் ஏறி இறங்க வேண்டாம். இருந்த இடத்திலிருந்தே பல வெப்சைட்களில் பொருளின் விவரம், விலை, Customer Feedback எல்லாம் படிச்சிட்டு ஆன்லைன்லயே வாங்கலாம். Amazon போன்ற தளங்களில் பயமில்லாமல் கடன் அட்டையை உபயோகித்து பொருட்களை வாங்கலாம். வங்கிக் கணக்கைக் கூட ஆன்லைனில் உபயோகிப்பது எளிது. இந்தியாவில் ICICI மற்றும் HDFC தளங்களை உபயோகித்திருக்கிறேன், இங்கு Bank of America வின் தளம் அவற்றை விட உபயோகிக்க எளிதாக உள்ளது. என்னளவில் Safe கூட.

4. லஞ்சம் இல்லை : அமெரிக்காவில் ஒட்டு மொத்தமாக லஞ்சம் இல்லை என நான் Blanket Statement கூறவில்லை. ஆனால் கண்டிப்பாக என்னைப் போன்ற Common Man
வாழ லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை எனக் கூற முடியும். கடந்த நாலு வருசத்தில் மூணு கார் வாங்கி ரெஜிஸ்டர் பண்ணியிருக்கிறேன், ஓட்டுனர் உரிமம் வாங்கியிருக்கிறேன்,
Electricity Connection, Phone Connection, Gas Connection வாங்கியிருக்கிறேன். இவ்வளவு ஏன், நாலு முறை Traffic police இடம் பிடிபட்டு ஒரு முறை டிக்கெட் வாங்கி, கோர்ட்டுக்குப் போய் அபராத்தை பாதியாக குறைத்திருக்கிறேன் - எதுக்கும் ஒரு பைசா லஞ்சம் கேட்டதுமில்லை, கொடுத்ததுமில்லை. மில்லியன் டாலர் காண்ட்ராக்ட்
தேவைப்படுவோர் லஞ்சம் கொடுப்பதாக இருக்கல்லாம், ஆனால் மிடில் க்ளாஸ் மக்கள் அமெரிக்காவில் வாழ லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை.

5. Customer is King : அமெரிக்கா வந்து போன எல்லாரும் இதனை ஒத்துக் கொள்வார்கள். இங்குள்ள பெரும்பாலான கடைகளில் கஸ்டமர் சர்வீஸ் மிகச் சிறப்பா இருக்கும். வால்மார்ட் போன்ற பெரிய கடைகளில் பொருட்களின் விவரங்களைப் பற்றி சொல்ல நெறய பேர் இல்லாம இருக்கலாம், ஆனா அக்கடைகளின் வெப்சைட்களில் எல்லா விவரங்களும் கிடைக்கும். ஒரு பொருள் உங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் அக்கடையின் கிளையில் இருக்கா இல்லயான்னு பாக்கலாம். கடைகளில் ஆங்காங்கே நிறுவப் பட்டிருக்கும் Price Check
உபகரணங்களில் வாங்கும் பொருளின் விலையை அறியலாம். வாங்கிய பொருளை 30 நாட்களுக்குள் (பிடிக்கலைன்னா) திரும்பக் கொடுத்து பணம் பெறலாம். நீங்க மற்றொருவருக்கு வழங்கும் அன்பளிப்புகளுக்கு Gift Receipt கொடுப்பாங்க. அதுல விலை குறிப்பிடப் பட்டிருக்காது. அன்பளிப்பை வாங்கியவருக்கு அப்பொருள் பிடிக்காமல் போனாலோ, அப்பொருள் வேலை செய்யாமல் போனாலோ அல்லது ஒரே மாதிரி 2-3 பொருள் அன்பளிப்பா வந்துவிட்டாலோ (அஜந்தா வால்கிளாக் நியாபகம் வருதா?) அவர் Gift Receipt ஐ எடுத்துச் சென்று வேறு பொருள் வாங்கிக் கொண்டு வரலாம்.

6. Snow : அமெரிக்காவில் இருக்கும் நெறய இந்தியர்களுக்குப் பிடிக்காத விசயம், ஆனா எனக்கு ரொம்ப பிடிச்ச விசயம். பாஸ்டனில் டிசம்பர் தொடங்கி மார்ச் மாசம் வரை பனிப் பொழிவு இருக்கும். வாரம் ஒருமுறை இருக்கும் பனிப்பொழிவு ஓரிரு முறை Snow Storm ஆக அடித்துத் தள்ளும். அப்பொழுதெல்லாம் ஊரே வெள்ளையா பாக்க ரொம்ப அழகா இருக்கும். காரின் மீது இருக்க்கும் Snow வை சுத்தப் படுத்தும் பணி தவிர Snow Season ல எனக்கு எல்லாமே பிடிக்கும்.

7. NO Sir Culture : நான் கேள்விப்பட்ட ஒரு விவரம் : வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதியை அங்கு சுத்தம் செய்யும் ஒரு தொழிலாளி பாக்கும் போது கூழைக் கும்பிடெல்லாம் போடாமல் சொல்வது : Good Morning Mr. President - அவ்வளவுதான் அவ்வளவேதான். இந்தியாவில் இருந்து இங்கு வந்த போது எனக்கு மிகவும் புதிதாக இருந்தது. என் டீமில் உள்ளவர்களை நான் ஒருபோதும் என்னை Sir என்று அழைக்க விட்டதில்லை எனவே எனக்கு இது பெரிய மாற்றமாக இருக்கவில்லை, நான் யாரையும் Sir போட்டு அழைக்க வேண்டாமென்று ஆகிய போது ரொம்ப சந்தோஷமா இருந்தது. அலுவலகத்தில் வேலை பார்க்கும் எவரையும் Hi Peter (அ) Hi Ramesh என்று பெயரிட்டுத்தான் அழைக்கணும்,யாரும் இங்கு சார் இல்லை.
இதுல ஒண்ணு கேட்டா இன்னும் ஆச்சர்யப் படுவீர்கள் : என்னை இங்கு இதுவரை Sir போட்டு விளித்தவர்கள் யார் தெரியுமா ? என்னை சாலையில் பிடித்த காவலர்கள் மட்டுமே.

8. 911 போன் : போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டி, Domestic violence இன்ன பிற எல்லாத்துக்கும் அமெரிக்காவில் ஒரே நம்பர் 911. ஆபத்துக் காலங்களில் இந்த எண்ணுக்கு போன் பண்ணதும் சில நிமிடங்களில் நமக்குத் தேவையான உதவி வந்து சேரும். மிகச் சிறப்பாக செயல்படும் இச்சேவை ஒரு இலவச ஆபத்பாந்தவன். நான் இங்கு வந்த புதிதில் ஒரு முறை அலுவலகத்தில் இருக்கும் Fire Alarm அழுத்தி விட்டேன். உடன் வேலை செய்யும் நண்பரிடம் சொல்ல அவர் உடனே 911 க்கு போன் பண்ணினார். நான் தவறாக இழுத்து 2-3 நிமிடங்கள்தான் ஆகியிருக்கும் அதுக்குள் 2 தீயணைப்பு வண்டிகள் நிலையத்தை விட்டு கிளம்பி விட்டதாகவும் அடுத்த சில நிமிடங்களில் எங்க அலுவலகத்தில்
இருப்பாங்கன்னும் அடுத்த முனையில் இருந்த பெண்மணி சொன்னார், அவ்வளவு வேகம்.

9. பெண்ணுரிமை : நான் கண்ட வரையில் ஆணுக்குப் பெண் சமம் என்பது அமெரிக்காவில் முழுமையாக நடைமுறையில் இருக்கு. இன்னும் சொல்லப் போனால் பெண்களுக்கு
அளவுக்கு அதிகமாகவே சுதந்திரம் இருப்பதாகவே நான் கருதுகிறேன். கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பெண்கள் ஆண்களுக்கு சமமாக இருக்கிறார்கள். சொல்லப் போனால்
அமெரிக்காவில் எந்தப் பெண்ணும் நானும் ஆணுக்குச் சமம் எனக்கும் உரிமை இருக்குன்னு சொல்வது கூட கிடையாது, அவர்கள் தங்களை கொஞ்சம் கூட ஆண்களுக்குக் குறைவாகக்
கருதுவதில்லை.

10. நகரம் / கிராமம் : அமெரிக்காவின் கட்டமைப்பில் இருக்கும் இன்னொரு முக்கிய விசயம் - நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் கட்டமைப்பில் அதிக வித்தியாசம் இல்லை.
பாஸ்டன் நகரில் இருக்கும் அதே மாதிரியான நல்ல குடிநீர், உணவு, சாலை வசதிகள், மருத்துவ, பள்ளி வசதிகள், மின்சாரம், இணையம் எல்லா வசதிகளும் நாட்டின் கடை கோடியில் இருக்கும் எல்லா இடங்களிலும் கிடைக்கும். இந்தியாவில் இன்று இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை நகரங்களில் இருக்கும் வசதிகள் கிராமப் புறங்களில் இல்லை.இது மாறினால் நகரங்களில் பெருகும் ஜனத்தொகை பெருக்கப் பிரச்சனையை பெருமளவு தீர்க்கலாம்.

ஏற்கெனவே இடுகை ரொம்ப பெரிசா போயிடுச்சு, எனவே பிடிக்காத பத்து நாளைக்குச் சொல்றேன்.

Monday, December 6, 2010

அழகா ஆங்கிலம் பேசலாம் வாங்க: பகுதி 7

ரொம்ம்ம்ம்ப நாளைக்கு முன்னர் எழுதின இத்தொடரின் சில இடுகைகள்:

தமிழ்மண நட்சத்திர வாரத்தில ஏழு இடுகைகள் எழுதணுமாமே, நேனெங்கே போறது அத்தனை இடுகைகள் வெரைட்டியா எழுத. இதில வேற கேபிள் சங்கர் மாதிரி எண்டர் கவிதைகள் எழுத மாட்டேன்னு கமிட் பண்ணிட்டேன், இல்லன்னா மண்டபத்திலயாவது வாங்கி வந்து ஒப்பேத்தலாம். ஒடனே அ ஆ தொடரை தூசி தட்டி எடுத்து அடுத்த பகுதி இதோ:

வழக்கம் போல நாம பேசுற ஆங்கிலத்தில் இருக்கும் தவறுகளை உணர்ந்து அவற்றைத் திருத்திக் கொண்டாலே ஓரளவுக்கு சரியா பேசலாம். இந்த பகுதியில் தொலைபேசியில் பேசும் போது நம்மில் பலர் வழக்கமா செய்யுற தவறுகளையும் திருத்தங்களையும் பாக்கலாம்.


தொலைபேசியில் பேசுறதுன்னு சொன்னதும் நாலு முக்கிய விசயங்கள் ஞாபகத்துக்கு வருது, அவை

1. ஒருவரை கைப்பேசியில் கூப்பிடுவதற்கு முன்னர் Land Line ல கூப்பிடணும், அதில் அவருடன் பேச முடியாத பட்சத்தில் கைப்பேசியில் கூப்பிடலாம்.

2. நீங்க ஒருவரை அவரின் கைப்பேசியில் கூப்பிடும் போது அவர் பிஸியாக இருக்கலாம், முதலில் - இன்னார் பேசறேன், இந்த விசயத்துக்காக கூப்பிட்டேன், ரெண்டு நிமிஷம் பேசலாமா என்று கேட்டு விட்டுத் தொடரவும்.

3. ஒருத்தருக்கு போன் பண்ணிட்டு “யார் பேசறதுன்னு கண்டுபிடி பாக்கலாம்” என்று எரிச்சலைக் கிளப்பாதீர்கள், குரலைக் கேட்டவுடன் கண்டுபிடிக்க நீங்க எம் ஜி யாரோ கருணாநிதியோ அல்ல.

4. வீட்ல போன் எடுக்குறதை விட அலுவலகத்தில் போன் எடுக்கும் போது அதிக கவனமா இருக்கணும். You are the face of your organization for the caller. நீங்க போன் அட்டெண்ட் செய்யுற விதத்தை வைத்துத்தான் நீங்க வேலை செய்யும் நிறுவனத்தையே அடுத்த முனையில் இருப்பவர் எடை போடுவார் எனபதை நினைவில் வைக்கவும். Official Greeting பல விதமா செய்யலாம், பல சரியான வாக்கியங்களில் இதுவும் ஒன்று, இதை சரியான tone இல் சொன்னால் போதும்

Good morning, Thank you for calling Kokran Mekran company, My name is Sriram, How can I help you today?

Telephone Etiquette சம்பந்தமா நாலு விசயங்களைத் தொடர்ந்து தொலைபேசியில் தவிர்க்க வேண்டிய ஆங்கிலத் தவறுகளில் சிலவற்றைப் பார்க்கலாம்.

This is Sriram this side என்று சொல்வதைத் தவிர்க்கலாம் My name is Sriram என்று சொல்வதே அழகா இருக்கும்

What is your good name - தவறு May I have your name? - இதுவே சரி

You will get it today itself / I will do that today itself என்று சொல்வதை விடுத்து You'll get it by the end of the day today என்று சொல்லலாம்

I will just come to your room எல்லாத்துக்கும் ஜஸ்ட் உபயோகப்படுத்துவதை விட்டு I will be with you in minute என்று சொல்வதே சரி.

Hold on மிக அதிக அளவில் தவறாக உபயோகப் படுத்தப்படும் ஒரு பதம் - இதுக்கு அர்த்தம் நீங்க செஞ்சிக்கிட்டு இருக்குறதைத் தொடர்ந்து செய்யுங்க என்பதே ஆகும். அடுத்த முனையில் பேசுபவரை இதைச் சொல்வது தவறு, இதுக்கு பதிலா Please be on the line or phone, I will check that for you or I will check if Mr. X is available at office என்று சொல்லலாம்.


I will just be back என்று சொல்வதை விட I will be back in just a minute or few minutes என்று சொல்லுங்க, அழகா இருக்கும்.

Revert back ரிவெர்ட்டுக்கு அடுத்து Back அவசியமில்லை Revert என்பதே போதுமானது.

Mr. X is out of station now, do you want to say something for him? என்று கூறாமல் Mr. X is not in town, he will be back on .., would you like to leave a message for him? என்று சொல்லலாம்

I am not getting you என்பதை விட I'm Sorry, I didn't understand that (or) I'm Sorry, Can you say that again என்பது அழகாக இருக்கும்.


மறுபடியும் அலுவலக போன் சம்பந்தமாக ஒரு டிப். உரையாடல் முடிந்த பின்னர் இப்படிச் சொன்னால் அழகா இருக்கும்.

Is there anything else you need from Kokran Mekran today? Thanks for calling us, have a wonderful day.

அழகா இருக்குன்னு அலங்கார வாக்கியங்களை எல்லா இடங்களிலும் சொன்னா என்ன ஆகும்னு இந்த ஜோக்கைப் படித்து புரிஞ்சிக்கோங்க:

நேர்முகத் தேர்வுக்கு வந்த பெண்ணை தெரிவு செய்த மேனேஜர், சம்பளத்தை முடிவு செய்ய எண்ணினார். அந்தப் பெண்ணிடமே எவ்வளவு சம்பளம் எதிர் பாக்கறீங்கன்னு கேட்டார்.
அந்த பெண் மாதத்துக்கு பத்தாயிரம் என்று சொன்னாள். உடனே அழகா பதில் சொல்வதாக எண்ணி மேனேஜர் சொன்னார் - “With Pleasure". அதுக்கு உடனே அந்தப் பெண் அப்படின்னா இருபதாயிரமா கொடுத்திடுங்க என்றாள். புரிஞ்சவங்க சிரிச்சிக்கோங்க..

Sunday, December 5, 2010

எவ்வளவோ தாங்கிட்டீங்க, இதையும் தாங்க மாட்டீங்களா என்ன?

அப்படி நம்பித்தான் சங்கர பாண்டி ஐயா நவம்பர் பத்தாம் தேதி மின்மடல் அனுப்பி டிசம்பர் மாதத்தில் ஒரு வாரம் தமிழ் மண நட்சத்திரமாக இருக்க விருப்பமான்னு கேட்டார்.
வேற நல்ல பதிவர் யாரும் கிடைக்காத கொடுமையோ அல்லது இது மாதிரி ஏதாவது பண்ணாலாவது இவன் கொஞ்சம் உருப்படியா எழுதுவான் என்று என்ற அவரின் நினைப்போ
எதுவோ ஒண்ணு அவரை எனக்கு மின் மடல் அனுப்ப வச்சிருக்கு. என்ன பண்றது விதி வலிது இல்லையா? நானும் படிக்கிற பத்துக் கணக்கான (கோடிக்கணக்கான வேணாம்
ஆயிரக் கணக்கான என்று எழுதினாலே அடி பின்னிடுவீங்கன்னு தெரியாதா?) நண்பர்களை நம்பி நானும் ஒத்துக்கிட்டேன்..

ஒரே ஒரு வாரம்தான், ப்ளீஸ் கொஞ்சம் அட்ஜீஸ் பண்ணிக்கிட்டீங்கன்னா, ஏதோ எனக்குத் தெரிஞ்ச சில விசயங்களைச் சொல்லிட்டு ஓடிடறேன். கேபிள் சங்கர் மாதிரி எண்டர் கவிதை
எழுதியோ உண்மைத் தமிழன் அண்ணன் மாதிரி நாவல் சைஸில் இடுகைகளோ எழுத மாட்டேன், நீங்களும் துப்புறதை பின்னூட்டங்களில் துப்பிட்டு மறந்திடணும், நேரில் பாக்குற வரைக்கும் மனசில வச்சிக்கிட்டு பழி வாங்குற அளவுக்கெல்லாம் போகக் கூடாது - இந்த டீலிங் ஓகேவா??

டிசம்பர் ஆறிலிருந்து பன்னிரெண்டாம் தேதிவரை இந்த வாய்ப்பு எனக்கு. இது என்ன மாதிரி co incidence என்று தெரியவில்லை, முதலாம் நாள் நான் (நான் மட்டுமா??) மறக்க விரும்பும் நாள். பன்னிரெண்டாம் தேதி மறக்க முடியாத முக்கியமான நாள். ரஜினியின் பிறந்த நாள் என்கிற வகையில் நெறய பேருக்கு டிசம்பர் 12ம் தேதி விசேஷ தினம், ஆனா எனக்கு வேறொரு வகையில் மறக்க முடியாத நாள், அது பத்தி பன்னிரெண்டாம் தேதி சொல்றேன்.

டிசம்பர் 6 - இந்தியாவுக்கே கறுப்பு தினம். உலக அரங்கில் இந்தியா தலை குனிந்த தினம். ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலை தகர்ப்புக்கும் இந்தியாவில் 1992ம் ஆண்டு நடந்ததுக்கும்
என்னைப் பொருத்த வரையில் பெரிய வித்தியாசமில்லை. இக்கறுப்பு தினத்தின் அரசியலுக்குள் புக விரும்பவில்லை. ஆனால் இந்தியா சகிப்புத்தன்மை அற்று போனது கண்டும் Co Existence தத்துவத்தில் நம்பிக்கை அற்றுப் போனதும் கண்டு தலை குனிந்த இந்தியர்களில் நானும் ஒருவன். கடவுள் நம்பிக்கை எனக்குண்டு, ஆனால் என்னைப் பொருத்த வரையில் கோவில்களின் தேவையே ஒரு கேள்விக்குறி. கோவில்களின் மீதும் மஸ்ஜித் களின் மீதும் பற்று கொண்டவர்கள் நாடு முழுதும் உள்ள புனரமைக்கப்படாத ஆயிரக்கணக்கான கோவில்களை புனரமைக்க கரம் கோக்காமல் வேண்டாத வேலைக்கு கரம் கோக்க தாழ்ந்தது என் போன்ற நாட்டின் மீது பற்று கொண்டவர்களின் தலை.

இதுக்கு செப்டம்பர் மாதம் வந்த தீர்ப்பு இதை விட பெரிய கொடுமை. இவ்வளவு பிரச்சனைக்கப்புறமும் அங்கே என்ன மயித்துக்கு கோவிலும் மஸ்ஜித்தும். அரசே இடத்தை கையகப் படுத்தி தீன் இலாஹி என்று பேரிட்டு ஒரு பள்ளிக்கூடம் கட்டுங்கடா வெண்ணைகளா. அங்கு படிக்கும் பிள்ளைகளுக்கு நாட்டுப் பற்றையும் நல்ல பண்புகளையும் சொல்லித் தாங்க. நாட்டுக்குத்தேவை பள்ளிகளும், லஞ்சம் வாங்காத அடுத்த சந்ததியும். பிரச்சனைக்கு அலையும் மதவாதிகள் அல்ல.

நான் இப்படித்தான். இந்தியா, லஞ்சம் பத்தி ஏதாவது ஆரம்பிச்சா உணர்ச்சி வசப்படுவேன், ஓவர் செண்டி ஒடம்புக்காகாது, எனவே நம்ப மேட்டருக்கு வருவோம். இந்த வாரத்தில்
வெறும் அமெரிக்கன் விசா பத்தி மட்டும் இல்லாம, Long Long ago விட்டுப்போன அழகா ஆங்கிலம் பேச வாங்க தொடரின் ஒரு பாகமும், நேர்முகத் தேர்வு தொடர்பான தொடரில் ஒரு சில பகுதியும் எழுத உத்தேசம். H1B விசா பத்தின சந்தேகங்கள் இருந்தா கேளுங்க, தெரிஞ்ச வரையில் சொல்றேன்.

ஒரு மிக முக்கியமான விசயம்: நண்பர் நர்சிம்மின் “தீக்கடல்” கவிதைத் தொகுப்பை உயிர்மை வெளியிடுகிறது. “ஏதாச்சும் செய்யணும் பாஸ்” வாக்கியத்தின் சொந்தக்காரர் அடைந்திருக்கும் உயரம் மகத்தானது. முதல் கவிதைத் தொகுப்புக்கு வாழ்த்துகக்ள் நர்சிம். உங்க கிட்டேயிருந்து இன்னும் நெறய எதிர் பார்க்கிறோம் பாஸ். நான் இனிமே தமிழ் ப்ளாக்கர் என்று என்னை சொல்லிக் கொள்வதை விட்டு விடலாமென்று இருக்கிறேன். பின்ன என்னங்க நாலு புத்தகங்கள் எழுதிய யுவகிருஷ்ணாவையும், கதை மற்றும் கவிதைத் தொகுப்பு எழுதிய நர்சிம்மையும் என்னையும்ஒரே அடைக்குறிக்குள் வச்சா நல்லாவா இருக்கு? கமலஹாசனும் J.K.ரித்திஷும் தமிழ் சினிமா உலகில் கதாநாயகர்கள் என்று சொல்வதைப் போல இருக்கு என் நிலைமை.

அப்புறம், இன்றிலிருந்து அனானி ஆப்சன் எடுத்திடறேன். கொஞ்ச நாளைக்கு முன்னர் ஒரு பிரச்சனை வந்த போது உண்மைத் தமிழன் உள்பட பல பதிவர்கள் அனானி ஆப்சன் எடுக்கச்
சொல்லி அட்வைஸ் பண்ணாங்க, அப்பவே சொல்லியிருந்தேன் - ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டேன், முடிச்சிட்டு எடுக்கறேன்னு. இப்போ ஓரளவுக்கு அனானி பிரச்சனை கொறஞ்சு இருக்கு. அருண் என்று ஒரு நண்பர் அனானி ஆப்சன்ல வந்து பல நல்ல கருத்துக்கள் சொல்லியிருக்கார், இது மாதிரி இன்னும் பல பேர். ஜனநாயகம் மற்றும் கருத்து சுதந்திரத்தில் மட்டற்ற நம்பிக்கை இருக்கும் எனக்கு அனானி ஆப்சன் எடுப்பதில் வருத்தமே, இருப்பினும் தொல்லைகளில் இருத்து தப்பிக்க அது ஒன்றே வழி என்பதினால் இன்றும் முதல் இந்த வலைப்பூவில் அனானி ஆப்சன் இருக்காது. வேறொரு சமயத்தில் இதை மாற்றும் நிலை வரும் என நம்புகிறேன். அருண் போன்ற நண்பர்கள் பின்னூட்டங்களை தனிமடலில் அனுப்பினால் இடுகையில் சேர்த்து விட உத்தேசித்திருக்கிறேன். அப்புறம் அக்டோபர் 15 அன்று எழுதிய ஒரு வேண்டாத இடுகையையும் நீக்கி விட்டேன்.

அடுத்த ஏழு நாளும் என்னுடன் தமிழ் மண முகப்பில் பயணிக்க இருக்கும் அனைவருக்கும் நன்றி.